கோலாலம்பூர், ஜூலை 18 – இஸ்லாம் மதத்தினரை இழிவுபடுத்தும் படுத்தும் படியான புகைப்படங்களை வெளியிட்ட, சர்ச்சைக்குரிய வலைப்பதிவாளர்களான அல்வின் டான் மற்றும் விவியன் லீ என்ற ஜோடியின் மீது இன்று கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் சமயத்தை இழிவு செய்தது, ஆபாச படங்களை பதிவேற்றம் செய்தது என 3 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.
டான் ஜே யீ என்ற முழுப் பெயர் கொண்ட ஆல்வின் டான் (வயது 25) மற்றும் அவரது தோழியான லீ மே லிங் என்ற விவியன் லீ (வயது 24) ஆகிய இருவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் இன்று நீதிபதி முர்தாஸாடி அம்ரான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
கடந்த ஜூலை 11 ஆம் தேதிக்கும், 12 ஆம் தேதிக்கும் இடையில், இரவு 10.48 மணியளவில் இக்குற்றத்தை அவர்கள் செய்ததாகக் கூறப்பட்டது. ஆனால் அவர்கள் இருவரும் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளனர்.
அவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், முதலாவது குற்றத்துக்கு 5,000 ரிங்கிட் வரை அபராதமும் அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம். இரண்டாவது குற்றத்துக்கு ஐந்து ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.