புது டெல்லி, ஆகஸ்ட் 4 – சீனாவில் ஆபாச வலைத்தளங்கள் முடக்கப்பட்டன என்ற செய்தி பெரிய அளவிலான பரபரப்பை ஏற்படுத்தாது. ஆரம்பம் முதலே சீனா, தொழிநுட்பம் மற்றும் தொலைத் தொடர்புத் துறையில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் எந்தவொரு அறிவிப்புகளும் இல்லாமல் ஒரே இரவில், இந்திய அரசு 857 ஆபாச வலைத்தளங்களை முடக்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஊடக சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு சாராரும், பாலியல் வன்முறைகளுக்குக் காரணமான அனைத்து வலைத்தளங்களும் மூடப்பட வேண்டும் என்று ஒரு சாராரும் விவாதித்து வரும் நிலையில், மத்திய அரசு, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி உள்ளதாகப் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, கமலேஷ் வாஸ்வானி என்ற வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், இந்தியாவில் ஆபாச வலைத்தளங்களை முடக்க உத்தர விட வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். வழக்கினை விசாரித்த நீதிபதி எச்.எல்.தத்து, நான்கு சுவர் மூடப்பட்ட ஒரு அறைக்குள், ஒருவர் ஆபாச வலைத்தளங்களை பார்ப்பதை தடுக்க முடியாது. அது, அவரின் தனிப்பட்ட உரிமை. இந்த விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தான், சனிக்கிழமை இரவு, ஆபாச வலைத்தளங்கள் முடக்கப்பட்டன. இது தொடர்பாக கமலேஷ் வாஸ்வானி கூறுகையில், “உச்ச நீதிமன்றத்தால் முடியாததை, பிரதமர் நரேந்திர மோடி முடித்து காட்டி இருப்பது பாராட்டுக்குரியது” என்று கூறியுள்ளார்.
முடக்கப்பட்டுள்ள 857 வலைத்தளங்களும், வாஸ்வானி, நேரடியாக தனது குழுவினரைக் கொண்டு தேர்ந்தெடுத்த வலைத்தளங்கள் என்றும் கூறப்படுகிறது. ஆபாச வலைத்தளங்கள் முடக்கப்படுவதை பற்றி முன்கூட்டியே அறிவிப்புகளை வெளியிட்டால், எதிர்ப்புகள் ஏற்படும் என்பதைக் கருதி தான் அரசு, ஒரே இரவில் இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகின்றது.