பட்டர்வொர்த்- ஒன்பது வயதுச் சிறுவன் மீது வேகமாக வந்த கார் ஒன்று, மோதும் காணொளி சமூக வலைதளங்களில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இணையத்தில் பதிவேற்றப்பட்டது முதல் இந்தக் காணொளியை சுமார் 73 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். அவர்களில் 700 பேர் இச்சம்பவம் குறித்து தங்களது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை ஜாலான் பெர்மாத்தாங் புவாவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்போது நூர் அடில் ஹகிம் முகமட் என்ற அந்த 9 வயதுச் சிறுவன் உள்ளிட்ட மூன்று பேர் சாலையைக் கடக்க முயற்சித்தனர். நூர் அடில் மட்டும் எதிர்புறம் கார் ஒன்று வேகமாக வருவதைக் கவனிக்காமல், சாலையைக் கடக்க, கண்ணிமைக்கும் நேரத்தில் அக்கார் அவன் மீது மோதியது.
இதனால் பல அடி தூரம் தூக்கி வீசப்பட்டான் சிறுவன். அவன் சாலையில் கவிழ்ந்து கிடக்கும் காட்சியுடன் அக்காணொளி முடிகிறது. காருக்குள் இருந்தவர்களே இக்காணொளியை எடுத்திருப்பதாகத் தோன்றுகிறது.
நல்லவேளையாக தலை, கால்களில் சிறு காயங்களுடனும், கன்னத்தில் சிறு சிராய்ப்புகளுடனும் உயிர் பிழைத்துள்ளான் நூர் அடில்.
“தனது நண்பனின் தாயார் மீன்பிடிப்பதைக் காண நண்பர்களுடன் வெளியே சென்றிருந்தார் நூர் அடில். இவ்வாறு அவன் வெளியே செல்வது இதுவே முதல்முறை. திடீரென அவனது தோழன் வீட்டிற்கு வந்து என் மகன் விபத்தில் சிக்கியதாகக் கூறியபோது அதிர்ந்து போனேன். நல்ல வேளையாக பெரிய காயங்கள் இன்றி அவன் பிழைத்ததற்காக கடவுளுக்கு நன்றி” என்கிறார் சிறுவனின் தாய் ருஸ்மாவதி அப்துல் ரகுமான் (41 வயது).
செபராங் ஜெயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நூர் அடில், சிகிச்சைக்குப் பின்னர் மறுநாளே வீடு திரும்பியுள்ளான். எனினும் விபத்து அதிர்ச்சியில் இருந்து அவன் மீளவில்லை.
“எனவே மனதளவில் என் மகன் சகஜநிலைக்கு திரும்பும் வரை அவனுக்கான மருத்துவ விடுப்பை மருத்துவர் நீட்டிப்பார் என நம்புகிறேன்” என்கிறார் ரூஸ்மாவதி.
அந்தக் காணொளியைக் கீழே உள்ள இணைப்பின் வழி காணலாம்:-