கோத்தாகினபாலு- பிலிப்பைன்ஸ் தீவுப் பகுதியில் எம்.எச்.370 விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என சபா காவல்துறை திட்டட்டமாகத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொண்டதில், விமான பாகங்கள் கிடைத்ததாகக் கூறப்படுவது பொய்யான தகவல் என்பது உறுதி செய்யப்பட்டதாக அம்மாநில காவல்துறை ஆணையர் டத்தோ ஜலாலுதீன் அப்துல் ரகுமான் கூறினார்.
“இது தொடர்பாக கிடைத்த தகவல்களை உற்றுக் கவனத்தால், அவை பயனுள்ள தகவல்களாகத் தோன்றவில்லை. எனவே இந்த விவகாரத்தை இத்துடன் கைவிடுவது நல்லது” என்றார் ஜலாலுதீன்.
விமான பாகங்களைக் கண்டதாக காவல்துறையிடம் தெரிவித்த ஆடவர் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படுமா? என்ற கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.
முன்னதாக, தனது உறவினர் ஒருவர் விமானத்தின் சிதைந்த பாகங்களைக் கண்டதாக ஜமில் ஓமார் என்ற 46 வயது ஆடவர் சபா காவல்துறையிடம் தெரிவித்திருந்தார்.
சுக்பே தீவுப் பகுதியில் இம்மாத தொடக்கத்தில் பறவைகளை வேட்டையாடச் சென்ற தமது உறவினர்கள் அங்கு விமானப் பாகங்களைக் கண்டதாக, ஜமில் ஓமாரின் அத்தை அவரிடம் கூறியிருந்தார். இதனால் பரபரப்பு நிலவி வந்தது.
இந்நிலையில் அதற்கு சபா காவல்துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.