கோலாலம்பூர் – செய்தி வாசிப்பின் போது பிரதமர் டத்தோஸ்ரீ நஜின் துன் ரசாக்கின் அதிகாரப்பூர்வமற்ற புகைப்படத்தைப் பயன்படுத்தியதால், தேசிய ஊடகமான ஆர்டிஎமின் மெண்டரின் செய்திப் பிரிவுக்கு தண்டனையாக சில தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து சீனப் பத்திரிக்கைகள் சில வெளியிட்டுள்ள செய்தியில், மெண்டரின் மொழியில் செய்தி வாசித்த அந்த செய்தியாளர் சுமார் 20 நிமிடங்களில் அந்த செய்தி தொடர்பான காணொளி எதுவுமின்றி ஒரே ஒரு புகைப்படத்தை மட்டுமே திரையில் காட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளன.
இதை ஆர்டிஎம் மெண்டரின் செய்திப் பிரிவின் தலைவர் டான் லீ வோனும் மலேசியாகினியிடம் உறுதிப்படுத்தியுள்ளார். இனி பிற்பகல் 12 மணி மற்றும் இரவு 8 மணி செய்திகளில் எந்த ஒரு காட்சிகளையும் ஒளிபரப்பக்கூடாது எனத் தங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நேற்று விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், நேற்று முதல் அமலுக்கு வரும் இந்தத் தடை எப்போது நீக்கப்படும் என்பது தனக்குத் தெரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு 8 மணி செய்தியில், பிகேஆருடனான வழக்கு ஒன்றில் பிரதமர் நஜிப் வெற்றி கண்டதைக் கூறும் செய்தியில், பயன்படுத்தப்பட்ட நஜிப்பின் புகைப்படத்தில், 1எம்டிபியில் தொடர்புடையதாக நம்பப்படும் பலரின் சிறு புகைப்படங்களும் இடம்பெற்று தொகுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.