புதுடெல்லி, ஆகஸ்ட் 5- ஆபாச இணையதளங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், மனுதாரர் குறிப்பிட்ட இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.
இதனால், கடந்த வாரம் ஒரே இரவில் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டன.
மத்திய அரசின் இந்த முடிவிற்கு நட்பு ஊடகங்களில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இது தனிமனித சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் என்ற விமர்சனமும் எழுந்தது. எனவே, இம்முடிவை மறுபரிசீலனை செய்ய மத்தியத் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திற்கு மோடி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து மத்தியத் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூட்டிய உயர்மட்டக் குழுவின் ஆலோசனைப்படி, சிறார்களின் ஆபாசப் படங்கள் இல்லாத இணையதளங்கள் மீதான தடையை மட்டும் நீக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
இந்தத் தடை நீக்கம் தற்காலிகமானது தான் என்றும் உச்ச நீதிமன்ற உத்தரவிற்குப் பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தொலைதொடர்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.