மும்பை, ஆகஸ்ட் 5- ஐபிஎல் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட வழக்கில் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று, லண்டனில் தலைமறைவாக உள்ள ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்குப் பிணையில் வெளிவர முடியாதபடி கைது உத்தரவைப் (பிடிவாரண்ட்) பிறப்பித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
லலித் மோடி 2010-ஆம் ஆண்டு ஐபிஎல் தலைவராக இருந்த போது கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக அப்போதைய பிசிசிஐ தலைவர் சீனிவாசன் அவர் மீது வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து அவர் இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று லண்டனில் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இவ்வழக்கில் அவருக்குப் பல சம்மன்கள் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராகவில்லை.கடந்த ஜூலை 3-ஆம் தேதியும் அமலாக்கப் பிரிவு அவருக்குச் சம்மன் அனுப்பியிருந்தது.
ஆனால்,அமலாக்கப் பிரிவினர் அனுப்பிய சம்மன்களை அவர் மதிக்கவில்லை.எனவே,அமலாக்கப் பிரிவு கடந்த 27-ம் தேதி நீதிமன்றத்தை நாடியது.
இந்த வழக்கை விசாரித்த மும்பை சிறப்பு நீதிமன்றம் லலித் மோடிக்குப் பிணையில் வெளிவர முடியாத பிரிவில் கைது உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
லலித் மோடி விசா பெற வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவும் உதவியதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தி, அவர்களைப் பதவி நீக்கம் செய்யுமாறு நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் தொடர் அமளியில் ஈடுபட்டிருக்கும் வேளையில்,லலித் மோடிக்குப் பிணையில் வர முடியாத கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.