புதுடில்லி -ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி முறைகேடு வழக்கில் தேடப்படும் குற்றவாளி லலித்மோடியைச் சர்வதேசக் காவல்துறையினர் நெருங்கிவிட்டனர். விரைவில் கைது செய்யப்பட்டு இந்தியாவிற்குக் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் முறைகேட்டில் கைது செய்யப்படும் சூழல் உருவானதும் லலித்மோடி லண்டனுக்குத் தப்பிச் சென்று தஞ்சம் அடைந்தார்.
நான்காண்டுக்கு மேலாகியும் அவரைக் கைது செய்ய மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லைஎன எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, லிலித்மோடியை கைது செய்ய மத்திய அரசு தீவிரமானது.
வெளிநாட்டில் பதுங்கியுள்ள அவரைக் கைது செய்ய ஏதுவாக ‘ரெட்கார்னர் நோட்டீஸ்’ பிறப்பிக்கப்பட்டு, லலித்மோடிக்கு எதிரான ஆவணங்களை சிபிஐ சர்வதேசக் காவல்துறைக்குக் கடந்த 20-ஆம் தேதி அனுப்பியது.
இதைத் தொடர்ந்து சர்வதேச காவல்துறை அவரைக் கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இத்தகவலை அறிந்த அவர் லண்டனில் இருந்து தென் ஐரோப்பாவிலுள்ள மால்டா தீவுக்குச் சென்று பதுங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.
அவரைக் கைது செய்ய சர்வதேசக் காவல்துறை அங்கு விரைந்துள்ளது. கைது செய்யப்பட்டவுன் அவர் உடனடியாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.