புதுடில்லி, ஆகஸ்ட் 21- ஐபிஎல் கிரிக்கெட் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுத் தற்போது லண்டனில் தலைமறைவாக உள்ள ஐபிஎல் கிரிக்கெட் முன்னாள் தலைவர் லலித்மோடியைக் கைது செய்து இந்தியாவிற்குக் கொண்டு வருவதற்கான முயற்சியில், அவருக்கு எதிராக ‘ரெட் கார்னர் நோட்டீஸ்’ அனுப்புவதற்கான ஆதாரங்களை- ஆவணங்களை இந்திய உளவுத்துறை, சர்வதேசக் காவல் அமைப்பிற்கு(இண்டர்போல்) அனுப்பியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கான நிதியில் முறைகேடு செய்ததாக லலித் மோடி மீது வழக்குப் பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. தன் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கையில் ஈடுபடுவதை அறிந்த லலித்மோடி லண்டனில் போய் பதுங்கி விட்டார்.
இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் வருமாறு லண்டனில் உள்ள அவருக்குப் பல முறை சம்மன் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராகவில்லை. இதனால் நீதிமன்றம், அவருக்குப் பிணையில் வெளியில் வர முடியாதபடி கைது செய்து சிறையில் அடைக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
அதனைத் தொடர்ந்து அவரைக் கைது செய்து இந்தியாவிற்குக் கொண்டு வர சிபிஐ, சர்வதேசக் காவல்துறையின் உதவியை நாடியது.
இந்நிலையில் லலித்மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்புவதற்காக ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களை இண்டர்போல் என்ற சர்வதேசக் காவல் அமைப்பிற்கு சிபிஐ அனுப்பி உள்ளது.
அதேபோல், சிங்கப்பூரில் இருக்கும் அவருக்குச் சொந்தமான நிறுவனங்கள் இரண்டின் வங்கிக் கணக்குகளை அமலாக்கப்பிரிவு அண்மையில் முடக்கி வைத்தது.
இதனால் லலித்மோடிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.