கொழும்பு, ஆகஸ்ட் 21- இன்று காலை 10 மணியளவில் இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பதவியேற்றார். அவருக்கு இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு நிகழ்ச்சி கொழும்புவில் உள்ள அதிபர் தலைமைச் செயலகத்தில் மிகச் சிறப்பாக நடந்தது.இந்நிகழ்ச்சியில் முன்னாள் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவும் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாகவே அரங்கத்திற்கு வந்துவிட்ட மகிந்த ராஜபக்சே, அரங்கில் இருந்த அனைவருக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
பதவியேற்பதற்கு முன் ரணில் விக்கிரமசிங்கே புத்த பிக்குகளையும் அவையோர்களையும் வணங்கினார். அதேபோல், அதிபர் சிறிசேனாவும் புத்த பிக்குகளையும் அவையில் உள்ளோரையும் வணங்கிய பின்பு அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இலங்கை தேசிய கீதம் இசைக்க, இலங்கையின் 23ஆவது பிரதமராக 4-ஆவது முறையாகப் பதவி ஏற்றுக் கொண்டார் ரணில் விக்ரமசிங்கே.
தொடர்ந்து 38 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் துணை அமைச்சர், இணை அமைச்சர், அவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவராகவும், 3 முறை பிரதமராகவும் இருந்து இலங்கை அரசியலில் சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.