கோலாலம்பூர், ஆகஸ்ட் 5 – ‘த எட்ஜ் வீக்லி’ மற்றும் ‘த எட்ஜ் ஃபினான்சியல் டெய்லி’ ஆகிய இரண்டு பத்திரிக்கைகளின் பதிப்புரிமைக்கு உள்துறை அமைச்சு விதித்த 3 மாத இடைக்காலத் தடையை தற்காலிகமாக நிறுத்தக் கோரி எட்ஜ் குழுமம் தாக்கல் செய்திருந்த மனுவை உயர்நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
எனினும், உள்துறை அமைச்சின் உத்தரவை எதிர்த்து வழக்கைத் தொடர்வதற்கு எட்ஜ் குழுமத்திற்கு அனுமதி அளித்துள்ளது.
அரசாங்கத் தரப்பில் பிரதிநிதித்த மூத்த கூட்டரசு சட்ட ஆலோசகரான லோக் யீ சிங் கூறுகையில், தடையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் மனுவை நிராகரித்ததற்கான காரணத்தை நீதிபதி அஸ்மாபி முகமட் வெளியிடவில்லை என்று தெரிவித்துள்ளார்.
1எம்டிபி விவகாரம் குறித்து தவறான செய்தி வெளியிட்டதாகக் கூறி எட்ஜ் குழுமத்தைச் சேர்ந்த ‘த எட்ஜ் வீக்லி’ மற்றும் ‘த எட்ஜ் பினான்சியல் டெய்லி’ ஆகிய இரு பதிப்புகளுக்கும் மூன்று மாதங்கள் இடைக்காலத் தடை விதித்து, கடந்த ஜூலை 24-ம் தேதி உள்துறை அமைச்சு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.