Home அரசியல் பாஸ் தலைவர் ஹாடி அவாங் மீது பிகேஆர் வேட்பாளர்கள் மூவர் அவதூறு வழக்கு தொடர முடிவு!

பாஸ் தலைவர் ஹாடி அவாங் மீது பிகேஆர் வேட்பாளர்கள் மூவர் அவதூறு வழக்கு தொடர முடிவு!

509
0
SHARE
Ad

news22713b

கோலாலம்பூர், ஜூலை 22 –  முன்னாள் புக்கிட் பெசி பிகேஆர் வேட்பாளர் முகமட் சம்சுல் மாட் அமின்,  கோத்தா புத்ரா பிகேஆர் வேட்பாளர் முகமட் அப்துல் கனி இப்ராஹிம், செபராங்  தாக்கிர் பிகேஆர் வேட்பாளர் அகமட் நஸ்ரி முகமட் யூசோப் ஆகிய மூவரும் பாஸ் தலைவர் ஹாடி அவாங் மீது அவதூறு வழக்கு தொடுக்கப்போவதாகக் கூறியுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம், அதாவது மே 5 பொதுத்தேர்தலுக்கு முன்பு ஹாடி அவாங் வெளியிட்ட ஒரு கருத்தில், கூட்டணிக் கட்சியான பிகேஆரை எதிர்த்து 7 தொகுதிகளில் பாஸ் வேட்பாளர்களை நிறுத்தப்போவதாகக் கூறியிருந்தார். அதற்குக் காரணம், பிகேஆர் வேட்பாளர்கள் மெத்தாம்பெத்தாமைன்(methamphetamine) என்ற ஒரு வகை மருந்துப் பொருளை விற்பதாகவும், கம்யூனிஸ்ட் தலைவர்களின் புகைப்படங்களை தங்கள் தலைமையகத்தில் தொங்கவிட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

இது குறித்து முன்னாள் புக்கிட் பெசி பிகேஆர் வேட்பாளர் முகமட் சம்சுல் கூறுகையில்,“ஹாடி வெளியிட்ட கருத்தின் விளைவாக, எனது கிராம மக்கள் தொடர்ந்து என்னை ஒதுக்கியும், ஏளனப்படுத்தியும் வருகிறார்கள். இதனால் எனது புகழுக்கு பங்கம் வந்துள்ளது. எனது குடும்பம், எனது கட்சி, எனது தொழில் முதலியவை மறைமுகமாக பாதிக்கப்பட்டுள்ளது” என்று தனது காவல்துறைப் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

ஹாடி அவாங் தனது உரையில் யார் பெயரையும் குறிப்பிடவில்லை என்றாலும், அந்த கருத்து திரங்காணு மாநிலத்தில் வைத்து கூறப்பட்டதால் அது சம்சுலைக் குறித்ததாக, அப்போது திரங்காணு மாநில பிகேஆர் தேர்தல் இயக்குனராக இருந்த யெஹ்யே சகாரியா கூறியுள்ளார்.

ஹாடி நேரடியாக யார் பெயரையும் குறிப்பிடாத போது அவர் மீது எப்படி அவதூறு வழக்கு தொடர முடியும் என்று சம்சுலிடம் கேட்டதற்கு, தான் நீதிமன்றத்தில் இது குறித்து பதிலளிப்பதாக இன்று கோலபெசுட்டில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் சம்சுல் கூறியுள்ளார்.

மேலும், இவ்விவகாரத்தை இத்தனை நாட்கள் வெளியே கொண்டுவராமல், தற்போது கோல பெசுட்டில் வைத்து செய்தியாளர் கூட்டத்தை ஏற்பாடு செய்தது ஏன் என்ற கேள்விக்குப் பதிலளித்த சம்சுல், இந்த ஏளனத்தை தன்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளார்.