Home இந்தியா அன்னிய முதலீடு அதிகரிப்பு நடவடிக்கை: மத்திய அரசுக்கு ஜெயலலிதா கண்டனம்

அன்னிய முதலீடு அதிகரிப்பு நடவடிக்கை: மத்திய அரசுக்கு ஜெயலலிதா கண்டனம்

629
0
SHARE
Ad

சென்னை, ஜூலை 24– முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் வரலாறு காணாத வகையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இது கடந்த பல ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மத்திய மந்திரி சபையின் பொருளாதார விவகார குழு சமீபத்தில் கூடி சில துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிக்க அனுமதி கொடுத்துள்ளது. இது விரும்பத்தகாத பல விளைவுகளை அதிகரிக்கச் செய்துள்ளது.

#TamilSchoolmychoice

jeyaaதொழிலாளர்கள் மற்றும் சாதாரண பொது மக்களின் நலனை பாதுகாப்பதற்கு பதில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வெளிநாட்டு நலன்களில்தான் அதிக அக்கறை காட்டுகிறது. இந்த வெளிநாட்டு சக்திகளின் மிரட்டலுக்கு மத்தியில் உள்ள பலவீனமான அரசு கோழைத்தனமாக தலை குனிகிறது.

அன்னிய நேரடி முதலீடு விஷயத்தில் மத்திய அரசு நாட்டின் பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான விஷயங்களை கண்டு கொள்ளாமல் முடிவை எடுத்துள்ளது. இது உள் நாட்டு தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.

தொலை தொடர்புத் துறையில் அன்னிய நேரடி முதலீடு 74 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய தொலைத் தொடர்பை வெளிநாட்டு நிறுவனங்கள் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் என்பதால், நமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

தகவல் பாதுகாப்பு மற்றும் நுகர்வோரின் தனிமையில் பிரச்சினைகள் எழும். அவற்றையெல்லாம் ஒழுங்குபடுத்துவது கடினம். தனியாரிடம் சேவையை ஒப்படைத்ததன் மூலம் தனி நபர்களின் தனிமை பாதிக்கப்பட்டதை நாம் பார்த்து வருகிறோம்.

தொலை தொடர்பு துறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீடுக்கு அனுமதி கொடுப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. அரசின் முயற்சி வெளிநாட்டு நிறுவனங்களுக்குத் தான் ஆதாயமாக முடியும் என்று கூறப்பட்டது.

வளர்ந்த நாடுகள் கூட தங்கள் நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தொலை தொடர்பு துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதில்லை. ஆனால் மத்திய அரசு இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் செயல்பட்டுள்ளது.

இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிக்கக் கூடாது என்று நான் எதிர்ப்பு தெரிவித்து இருந்தேன். நமது நாட்டில் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் நன்கு வலுவாக உள்ளன. அவை மக்கள் நலனை கருத்தில் கொண்டு நல்ல சேவையை வழங்கி வருகின்றன.

தமிழ்நாட்டில் முதல்–அமைச்சரின் ஒருங்கிணைந்த சுகாதார காப்பீட்டு திட்டம், அரசு ஊழியர் சுகாதார காப்பீட்டு திட்டம் ஆகிய இரண்டும் மிகவும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் இவை பிரத்யேகமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மத்திய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஒரு மாநில அரசு அளிக்கும் ஆதரவை கூட மத்திய அரசு கொடுக்காமல் உள்ளது. தொலை தொடர்பு மற்றும் விமான துறை போன்று காப்பீட்டுத் துறையையும் மாற்ற மத்திய அரசு மிகவும் ஆர்வமாக உள்ளது.

மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகளால்தான் பொதுத்துறை நிறுவனங்கள் கடும் இழப்பை சந்திக்கின்றன. இந்த நிலையில் காப்பீட்டு சட்ட (திருத்தம்) மசோதா–2008 பாராளுமன்றத்தில் இன்னமும் நிலுவையில் உள்ளது. இந்த மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு போதுமான பலம் இல்லை.

ஒரு வேளை இந்த மசோதாவை இரட்டை வேடம் போடும் தி.மு.க. போன்ற கூட்டணி கட்சிகள் உதவியுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றி விடலாம் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் இருக்கலாம். சில்லறை விற்பனையில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் விசயத்தில் பாராளுமன்ற இரு அவைகளிலும் நடந்த விவாதத்தில் எதிர்ப்பு தெரிவித்து பேசிய தி.மு.க. பிறகு அதை ஓட்டெடுப்பின்போது ஆதரித்த இரட்டை வேடம் எல்லோருக்கும் தெரியும்.

மத்திய அரசு இக்கட்டான சூழ்நிலையில் உறுதியான நடவடிக்கை எடுக்கவே அரசை ஆதரித்ததாக கருணாநிதி கூறியதன் மூலம் பூனைக்குட்டி வெளியில் வந்து விட்டது. மேலும் தி.மு.க.வின் எதிர்ப்பு நடவடிக்கை எல்லாம் வெறும் கண்துடைப்பு என்று எல்லோருக்கும் புரிந்து விட்டது.

தோட்டத்துறையில் அன்னிய நேரடி முதலீடு 49 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 100 சதவீதத்தை எட்டும் வகையில் சலுகை அனுமதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஏராளமான சிறு தேயிலை தோட்டக்காரர்கள் உள்ளனர். அவர்களது வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும்.

எனவே தோட்டத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. தோட்டத் துறையில் அன்னிய நேரடி முதலீடு அதிகரிக்கப்பட்டு அமல்படுத்தப்படும் பட்சத்தில், அது சில ஆண்டுகளிலேயே தேயிலை வளர்ப்பவர்களை தொழிலாளர்களாக மாற்றி விடும்.

தோட்டத் தொழிலாளர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகும். அவர்களது அச்சம் அகற்றப்பட வேண்டும்.

எனவே தோட்டத் தொழிலாளர்களுக்கு போதுமான பாதுகாப்பை கொடுக்க, அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்கு முன்பு மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தி இருக்க வேண்டும்.

பாதுகாப்புத் துறையில் அன்னிய நேரடி முதலீடு 26 சதவீதமாகவே நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் நவீன தொழில்நுட்பம் தொடர்பாக அதிக முதலீட்டு அளவை பாதுகாப்புக்கான மத்திய மந்திரிசபை முடிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தெளிவு இல்லாமல் உள்ளது.

தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாமல் நவீன ஆயுதங்களை கொள்முதல் செய்வது குழப்பத்தை மேலும் அதிகரிக்கும். எனவே மிக முக்கிய துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் போது கவனம் தேவை. தேசிய நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் இந்த விசயத்தில் நாம் சமரசம் ஆகவே கூடாது.

சில்லறை வர்த்தகத்தில் விற்பனை கடைகளை வெளிநாட்டு நிறுவனங்கள் அமைப்பதற்கு முன்பு மாநில அரசுகளின் ஒப்புதலை பெறும் வகையில் திருத்தம் செய்ய வேண்டும். அதன் மூலம்தான் லட்சக்கணக்கான சிறு வியாபாரிகளுக்கு வாழ்வாதாரம் கொடுத்து கொண்டிருக்கும் சிறு கடைகளை உறுதியாக பாதுகாத்து காப்பாற்ற முடியும்.

சமநிலை இல்லாத நாட்டின் பொருளாதாரத்தை சரிபடுத்த மத்திய அரசு மேற்கொண்ட அன்னிய நேரடி முதலீடு சலுகைகள் வலுவானதாகவோ, மிகச் சரியான நடவடிக்கையாகவோ இல்லை.

நடப்பு கணக்கில் உள்ள சம நிலையின்மையை போக்க கொள்கைகளில் மாற்றம் செய்து ஏற்றுமதியை மேம்படுத்தி இருக்க வேண்டும்.

அனைத்துக்கும் மேலாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மோசமான நிர்வாகம் காரணமாக முதலீட்டாளர்கள் இந்தியாவில் இருந்து விலகி ஓடியபடி உள்ளனர். ஊழலுக்கும், லஞ்சத்துக்கும் மட்டுமே அரசு பெயர் பெற்றுள்ளது.

உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் திறம்பட செயல்படாமல் மத்திய அரசு உள்ளது. நாட்டில் முதலீட்டாளர்களுக்கு ஏற்ற ஒரு சூழ்நிலையை காங்கிரஸ் கூட்டணி அரசு ஏற்படுத்தி கொடுக்கவில்லை.

ரூபாய் மதிப்பு சரிவை தடுக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் முடமாக உள்ளன. இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைவது, நமது கவுரவத்தையும் குறைத்து விட்டது.

அது மட்டுமின்றி இது பண வீக்கத்தை அதிகரிக்க செய்துள்ளது. இதனால் ஏழை–எளிய சாதாரண பொது மக்கள் வாழ்க்கையை நடத்த கடினமாக உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு இந்த துன்பத்தை அதிகரிக்க செய்துள்ளது.

குறுகிய கண்ணோட்டத்துடன் அன்னிய நேரடி முதலீடுகளை அதிகரிக்க செய்து இருப்பது ரூபாய் மதிப்பை வலுப்படுத்த உதவாது. ஏற்றுமதியில் உறுதியான கொள்கை, தேவை இல்லாத பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிப்பது, ஊக வாணிபத்தை ஒழிப்பது ஆகியவையே ரூபாய் மதிப்பை பலப்படுத்த உதவும்.

பொது மக்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டியது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பொறுப்பாகும். ஆனால் மத்திய அரசின் கொள்கை முடிவுகள் மக்கள் நலனுக்கு விரோதமாக உள்ளன.

ஏழைகள், நடுத்தர மக்கள் மற்றும் சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவிலும் உள்ளவர்களுக்கு நல்லது செய்ய வேண்டிய விசயத்தில் மத்திய அரசு சொரணை இல்லாமல் உள்ளது.

இதுவே காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு மிக விரைவில் சாவு மணி அடித்து விடும். கணக்கு தீர்க்கும் அந்த நாள் நெருங்கி விட்டது.

இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார்.