கோலாலம்பூர், ஜூலை 24 – சட்டத்துறை அலுவலகம், எதிர்கட்சித்தலைவர் அன்வார் இப்ராகிமின் சட்ட ஆலோசனைக்குழுவிற்கு செலவுத்தொகையாக 1000 ரிங்கிட் தர வேண்டும் என்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் உள்துறை அமைச்சர் சையத் ஹமீத் ஆல்பருக்கு எதிராக அன்வார் தொடுத்த அவதூறு வழக்கு தொடர்பான விசாரணை இன்று தொடங்கவிருந்தது. ஆனால் சட்டத்துறை அலுவலகம் அவ்விசாரணையை தள்ளி வைக்க முற்பட்டது.
அன்வாரின் சட்ட ஆலோசனைக் குழுவில் ஒருவரான சங்கர நாயர் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், “அன்வார் உட்பட இவ்வழக்கில் போதுமான சாட்சியங்கள் இங்கு வந்திருக்கிறார்கள். எனினும் விசாரணையை தள்ளி வைக்க சட்டத்துறை அலுவலகம் வேண்டுகோள் விடுப்பதால், செலவுத்தொகையாக 1000 ரிங்கிட்டை தர கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது” என்று தெரிவித்தார்.
சையத் ஹமீத் தன்னை அமெரிக்க உளவாளி என்று விமர்சித்ததற்காக, கடந்த 2008 ஆம் ஆண்டு அன்வார், சையத் மீது அவதூறு வழக்கு தொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.