கோலாலம்பூர், ஜூலை 25 – மாணவர்களுக்கு குளியலறைக்கு அருகே தற்காலிக சிற்றுண்டி சாலை அமைத்து உணவருந்த வைத்த விவகாரத்தை, கல்வித் துணையமைச்சர் பி.கமலநாதன் சத்தமின்றி முடிவுக்கு கொண்டு வந்துவிட்டதாக பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கூறியுள்ளார்.
“மக்களுக்கு உண்மை என்னவென்று தெரிய வேண்டும். அப்போது தான் அது இனம், மதம் சார்த்த விவகாரம் அல்ல என்று கமலநாதன் கூறுவதை மக்கள் நம்புவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும்,“கடந்த மார்ச் மாதம் முதல் குளியலறைக்கு அருகில் சிற்றுண்டி சாலை அமைக்கப்பட்டிருந்தால், அதை ஏன் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தவில்லை?”என்றும் லிம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ்விவகாரம் குறித்து நேற்று அறிக்கை விடுத்த கமலநாதன், “இது இனம் அல்லது மதம் சார்ந்த பிரச்சனை அல்ல என்பதை முதலில் தெளிவு படுத்த விரும்புகிறேன். கடந்த மார்ச் முதல் சிற்றுண்டி சாலையை குளியல் அறைக்கு அருகில் தற்காலிகமாக அமைத்து பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். காரணம் இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் சிற்றுண்டி சாலை புதுப்பிக்கும் பணி தொடங்கியுள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.