கோலாலம்பூர், ஜூலை 25 – ஆபாச வலைப்பதிவாளர்களான ஆல்வின் டான் மற்றும் விவிலியான் லீ ஆகிய இருவரும் தங்களின் மேல் 3 வெவ்வேறு குற்றச்சாட்டுகளுக்கு தலா 5000 ரிங்கிட் வீதம் மொத்தம் 30,000 ரிங்கிட் பிணைத்தொகை செலுத்தி விடுதலை செய்ய நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
எனினும், அவர்கள் இருவரும் தங்களது கடவுச்சிட்டை(passport) ஒப்படைப்பதோடு, வலைத்தளங்களில் எந்த ஒரு ஆபாச படங்களையும் பதிவேற்றம் செய்யக்கூடாது என்ற நிபந்தனையையும் விதித்துள்ளது.
அத்துடன், மாதந்தோறும் அருகே இருக்கும் காவல்நிலையத்திற்கு சென்று கையெழுத்திட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 18 ஆம் தேதி டான் மற்றும் லீ மீது, இஸ்லாம் மதத்தினரை இழிவுபடுத்தியது, ஆபாச படங்களை வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தது போன்ற 3 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.
அவர்கள் இருவரும் தங்களுக்கு பிணை வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும், அமர்வு நீதிமன்ற நீதிபதி முர்த்தாசாடி அமரன் அக்கோரிக்கையை மறுத்துவிட்டார்.
இந்நிலையில், அவர்களது விண்ணப்பம் மீண்டும் மறுபரிசீலனை செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் தங்களின் மீது இதற்கு முன் எந்த ஒரு குற்றவியல் வழக்கும் இல்லாததை எடுத்துக்கூறினர்.
இருப்பினும், அவர்களிடம் இருந்த மடிக்கணினி உள்ளிட்ட அனைத்து எலெக்ட்ரானிக்ஸ் உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.