ஜூலை 25- சிம்புவும், ஹன்சிகாவும் தங்களுடனான காதலை பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.
இருவரும் ‘வேட்டை மன்னன்’, ‘வாலு’ படங்களில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது நெருக்கம் ஏற்பட்டது. பின்னர் காதல் வயப்பட்டார்கள். இருவருக்கும் காதல் மலர்ந்தது எப்படி என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சிம்புவுடன் ‘வாலு’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானபோது ஹன்சிகாவை பலர் எச்சரித்தனர். நயன்தாரா விவகாரங்களை சுட்டிக்காட்டி தள்ளியே இரு என்று தோழிகள் அறிவுறுத்தினர்.
சிம்புவின் நடவடிக்கைகள் ஹன்சிகாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் பிடிக்க ஆரம்பித்தது. பிறகு பழக ஆரம்பித்தார்.
அதன் பிறகுகூட அவர்களுக்குள் சிறு சிறு சண்டைகள் ஏற்பட்டன.
ஒரு கட்டத்தில் இந்த ஊடல் அவர்களை மேலும் நெருக்கமாக்கியது. ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு வந்தனர்.
சிம்புவுக்கு வேலூர் அருகே உள்ள பெண்ணை குடும்பத்தினர் பார்த்து விட்டு வந்தனர். அப்பெண்ணுக்கே திருமணம் செய்து வைக்கவும் தயாரானார்கள்.
ஹன்சிகாவின் தாய் மோனா மொத்வானியும் காதலை முறிக்கும்படி நிர்ப்பந்தித்தார். ஹன்சிகா இப்போதுதான் முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார்.
சமீபத்தில் வெளியான ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘சிங்கம்–2’ படங்கள் வெற்றிப்பெற்றதால் மார்க்கெட் எகிறியுள்ளது. சம்பளத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளார்.
சிம்புவும் ஹன்சிகாவும் பெற்றோர் எதிர்ப்பை பொருட்படுத்தவில்லை. காதலில் உறுதியாக இருந்தனர். இன்னொருபுறம் பெற்றோரை சம்மதிக்க வைக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டனர்.
இருவரும் காதலில் பிடிவாதமாக இருந்ததால் வேறு வழியின்றி குடும்பத்தினர் பச்சைக்கொடி காட்டினார்கள்.
இதையடுத்து காதலை அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளனர். உடனடியாக திருமணத்தை நடத்த சிம்பு விரும்புவதாக கூறப்படுகிறது. ஆனால் ஹன்சிகா ஐந்து வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என்கிறாராம்.
இப்போது இருவரும் சினிமாவில் பிசியாக இருக்கிறார்கள்.