புதுடெல்லி, ஜூலை 26- பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் நடைபெற இருந்த மந்திரி சபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதேபோல் நேற்றும் மந்திரி சபை கூட்டம் நடைபெறுவதாக இருந்தது.
இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய மசோதாக்கள் பற்றி விவாதித்து முடிவு எடுக்கப்பட இருந்தது. ஊழலை அம்பலப்படுத்துவோருக்கு பாதுகாப்பு அளிக்கும் மசோதாவில் திருத்தங்கள் கொண்டு வருவது பற்றி விவாதிக்க திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த மசோதா கடந்த ஆண்டு டெல்லி மேல்-சபையில் தாக்கல் செய்யப்பட்டு, விவாதம் நடக்க இருந்தது. ஆனால் மத்திய மந்திரி விலாஸ்ராவ்தேஷ்முக் மறைவால் ஒத்திவைக்கப்பட்டு விட்டது.
நாட்டில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்த மாவட்டங்களில் அவர்களை ஒடுக்குவதற்கும், அந்த பகுதிகளில் வளர்ச்சித்திட்டங்களை நிறைவேற்றுவதற்கும் மத்திய அரசு ரூ.1000 கோடி கூடுதல் நிதி உதவி திட்டத்தை நிறைவேற்ற உள்ளது. இதுகுறித்தும் நேற்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட இருந்தது.
இந்தநிலையில் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் நடைபெற இருந்த மந்திரி சபைக்கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.