கோலாலம்பூர், ஜூலை 27 – காஜாங் சிறையில் உள்ள ஹிண்ட்ராப் தலைவர் பி.உதயகுமாரை வரும் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முதுகுத் தண்டுவட மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்கவில்லை என்றால் சிறை முன்பாக போராட்டம் நடத்தப்போவதாக ஹிண்ட்ராப் இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று உதயகுமாரின் மனைவி இந்திரா தேவி தலைமையில், சுமார் 500 ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள் ஒன்று கூடி கூட்டம் ஒன்றை நடத்தினர்.
அப்போது ஹிண்ட்ராப் பொதுச் செயலாளர் எஸ். தியாகராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சிறை அதிகாரிகள் அனுமதி தர மறுத்தால் காஜாங் சிறை முன்பாக போராட்டம் நடத்துவோம்” என்று கூறினார்.
கடந்த சில வாரங்களாக உதயாவின் முதுகுத் தண்டுவடத்தில் கடுமையான வலி உள்ளதாகவும், அவரது உடல் நிலை மோசமான நிலைக்கு போய்க் கொண்டிருப்பதாகவும் இந்திரா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பத்திரிக்கைகளுக்கு தெரிவித்திருந்தார்.
மேலும், வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி கெபாங்சான் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் உதயாவிற்கு முதுகு தண்டுவட சிகிச்சை அளிக்க இந்திரா ஏற்பாடு செய்திருக்கிறார்.
இதற்கு முன்பு அதே மருத்துவமனையில் ஜூலை 18 ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவ சிகிச்சைக்கு உதயா அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் உதயாவிற்கு கடந்த ஜூன் 5 ஆம் தேதி இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.