Home நாடு “அவர்கள் சஞ்சீவனைக் கொல்ல முயற்சி செய்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை” – தந்தை கூறுகிறார்

“அவர்கள் சஞ்சீவனைக் கொல்ல முயற்சி செய்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை” – தந்தை கூறுகிறார்

685
0
SHARE
Ad

SANJIVANகோலாலம்பூர், ஜூலை 30 – குற்றத் தடுப்பு ஆர்வலர் ஆர்.சஞ்சீவன், செர்டாங் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார். அவருக்கு மிக நெருக்கமானவர்கள் கூட தங்கள் பாதுகாப்பு குறித்து அச்சம் அடைந்துள்ளனர்.

குற்றத் தடுப்பு அமைப்பின் ஆலோசகரான எஸ். கோபி கிருஷ்ணன் கூட, பாதுகாப்பு காரணங்கள் கருதி நேற்று மருவமனைக்கு பார்வையிட வரவில்லை.

ஆனால் சஞ்சீவனின் தந்தை பி.ராமகிருஷ்ணன் (வயது 64) மட்டும் அங்கு அமைதியாகவும், கனத்த மனதோடும் அமர்ந்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

“நான் வயதானவன், என்னுடைய உடலில் பாகங்கள் அனைத்தும் ஓய்ந்துவிட்டன” என்று நேற்று இரவு மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

குற்றவியல் வழக்கறிஞராக 30 ஆண்டுகள் பணியாற்றிய ராமகிருஷ்ணன் தான், தனது மகன் சஞ்சீவனுக்கு இப்படிப் பட்ட மனோபலத்தையும், குற்றங்களுக்கு எதிராகப் போராடும் தைரியத்தையும் கொடுத்தது.

“சஞ்சீவன் என்னிடம் ‘மை வாட்ச்’ அமைப்பு பற்றி கூறியிருக்கிறார். அதோடு அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றும் எனக்குத் தெரியும். ஆனால் அதைப் பற்றி நான் கவலைப் படவில்லை”

“குற்றவாளிகள் இவரைத் தாக்க வாய்ப்புண்டு என்று நினைத்தேன். ஆனால் துப்பாக்கியால் சுடும் அளவிற்கு போகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை” என்று ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கவலையுடன் சஞ்சீவனின் தாய்

சஞ்சீவனின் பாதுகாப்பு குறித்து அவரது தாய் மிகவும் கவலையடைந்திருப்பதாகவும், இந்த அமைப்பில் இருந்து அவரை விடுபட வலியுறுத்தியதாகவும்  ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தான் செய்யும் இந்த குற்றங்களுக்கு எதிரான செயலை கைவிட்டால், பிறகு யார் தான் இதை செய்வது என்று சஞ்சீவன் தன்னிடம் கூறியிருப்பதாகவும் ராமகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்தவாரம், ஒரு விடுதியின் அடித்தளத்தில் வைத்து பாராங் கத்தியால் சஞ்சீவனைத் தாக்க ஒரு கும்பல் முயற்சி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், நெகிரி செம்பிலானில் உள்ள தங்கள் வீட்டில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும், கண்கானிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்றும் சஞ்சீவன் தன்னிடம் கூறியதாக ராமகிருஷணன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த வாரம் சனிக்கிழமை, சஞ்சீவன் நெகிரி செம்பிலானில் உள்ள பாகாவ் என்ற இடத்தில் மோட்டாரில் செல்லும் போது சுடப்பட்டார் என்ற அதிர்ச்சியான செய்தியொன்று அவரது குடும்பத்திற்கு வந்துள்ளது.

சஞ்சீவனின் மார்பில் பாய்ந்துள்ள தோட்டாவை அகற்ற தற்போது செர்டாங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனை தான் தற்போது பாதுகாப்பான இடம்

கடந்த மூன்று நாட்களாக, சஞ்சீவனின் குடும்பம் மருத்துவமனையில் தான் உறங்கி வருகிறார்கள். தற்போதைய சூழ்நிலையில் மருத்துவமனை தான் பாதுகாப்பான இடம் என்று கூறப்படுகிறது.

“காவல்துறையின் பாதுகாப்பு எனக்கு திருப்தி அளிக்கிறது, சிரம்பானை விட இது சிறப்பாக இருக்கிறது. எப்போதும் நானோ அல்லது எனது மனைவியோ சஞ்சீவனுக்கு அருகிலேயே இருக்கிறோம். காவல்துறையினரும் பாதுகாப்பிற்காக இருக்கிறார்கள்” என்று ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சஞ்சீவனின் குடும்பத்தினரைத் தவிர அவரது நெருங்கிய நண்பர்கள் கூட பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.

“நாங்கள் சஞ்சீவனின் உடல்நிலையை கவனித்து வருகிறோம். இன்னும் சில நாட்களில் அவரது உடல்நிலை முன்னேற்றம் அடையும் என்று நம்புகிறேன். அதன்பிறகு தான் உண்மையில் என்ன நடந்தது என்று அவரிடத்தில் பேச வேண்டும்” என்று ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.