Home நாடு அன்வார் வழக்கில் சர்ச்சையாகும் சஞ்சீவனின் பெயர்!

அன்வார் வழக்கில் சர்ச்சையாகும் சஞ்சீவனின் பெயர்!

664
0
SHARE
Ad

tumblr_mc13odiz861rau2jyo1_500கோலாலம்பூர், பிப்ரவரி 24 – “மைவாட்ச்” மலேசிய குற்றச் செயல் கண்காணிப்புக் குழு (Malaysian Crime Watch Task Force – MyWatch) என்ற பெயரிலான அமைப்பின் தலைவராக இருந்து கொண்டு பல வேளைகளில் சர்ச்சையில் சிக்குபவர் ஆர்.சஞ்சீவன்.

அத்தகைய சர்ச்சைகளின் உச்சகட்டமாக ஒருமுறை அவர் சுடப்பட்டு, தெய்வாதீனமாகத் தப்பித்தார்.

தற்போது அன்வார் இப்ராகிமின் வழக்கிலும் சஞ்சீவன் தலையிட்டார் என்ற சர்ச்சை புறப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

முன்னாள் காவல்துறை அதிகாரி ஜூன் பெரைராவின் குற்றச்சாட்டு

அன்வார் இப்ராகிமுக்கு எதிரான ஓரினப் புணர்ச்சி வழக்கை விசாரணை அதிகாரியாக இருந்து நடத்திய காவல் துறை அதிகாரி ஜூன் பெரைரா என்பவர்.

இவர் தற்போது காவல் துறை பணியில் இருந்து ஓய்வு பெற்று, வழக்கறிஞராகப் பணியாற்றி வருகின்றார்.

அன்வாருக்கு ஆதரவாக வழக்கைத் திசைமாற்றி, கவிழ்க்க வேண்டுமென தாம் மைவாட்ச் தலைவர் சஞ்சீவனால் வற்புறுத்தப்பட்டதாக அந்த வழக்கை அப்போது விசாரித்த ஜூட் பெரைரா அண்மையில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இணைய ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் சஞ்சீவன் தன்னை தொடர்பு கொண்டு நேரில் சந்திக்க வேண்டுமென கூறியதாக ஜூட் பெரைரா தெரிவித்துள்ளார்,

அன்வாரோடு தொலைபேசி உரையாடல்

“கோலாலம்பூர் ஹில்டன் விடுதியில் சஞ்சீவனை சந்தித்தபோது, அன்வார் வழக்கில் சர்ச்சை இருப்பதாகவும், எனது விசாரணையில் அரசாங்க தலையீடு இருப்பதாகவும் ஓர் அறிக்கை வெளியிட வேண்டுமென சஞ்சீவன் கூறினார். ஆனால் நான் மறுப்பு தெரிவித்தேன். இதையடுத்து அன்வாரை தொடர்பு கொண்டு பேசிய சஞ்சீவன், பிறகு தனது கைபேசியை என்னிடம் கொடுத்தார். பொதுத் தேர்தலில் வெற்றி பெற டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு வாழ்த்து தெரிவித்தேன். எனினும் சஞ்சீவன் நான் என்ன கூற வேண்டும் என விரும்பினாரோ, அதை அன்வாரிடம் நான் கூறவில்லை,” என்று ஜூட் பெரைரா குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து பெயர் குறிப்பிடாத இரு நபர்கள் மூலமாக பத்திரிக்கை அறிக்கை ஒன்றை சஞ்சீவன் தன்னிடம் சேர்ப்பித்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், அந்த அறிக்கையை வெளியிடும் பட்சத்தில், தனது நலன்களுக்குப் பொறுப்பேற்றுக் கொள்வதாக சஞ்சீவன் கூறியதாக தெரிவித்துள்ளார்.

“13ஆவது பொதுத் தேர்தலில் அன்வார் வெற்றி பெற்றால் எனக்கு நன்மை உண்டாகும் என்றனர். ஆனால் சுமார் நூறு வார்த்தைகள் கொண்ட அந்த அறிக்கையை படித்ததும் அதிர்ந்து போனேன். அன்வாருக்கு எதிரான வழக்கில் நான்தான் விசாரணை அதிகாரி என்றும், அப்பாவியான அன்வார் மீது காரணமின்றி வழக்கு தொடுக்கப்பட்டதாகவும், அவருக்கெதிரான சாட்சிகள் ஜோடிக்கப்பட்டதாகவும், நான் கூறுவது போல் அந்த அறிக்கை அமைந்திருந்தது.” என்றும் பெரைரா தெரிவித்துள்ளார்.

“ஆனால் எனது நேர்மையை தற்காத்துக் கொள்ள விரும்பியதால் இந்த அறிக்கையை வெளியிட நான் விரும்பவில்லை. சஞ்சீவனுடனான சந்திப்பு குறித்து முன்னாள் காவல் துறை தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ மூசா ஹாசானும் அறிவார். இச்சந்திப்புக்கு பின்னர் என்ன நடந்தது என்பதை அவரிடம் தெரிவித்தேன். அப்போது நான் செய்தது சரிதான் என்று அவர் தெரிவித்தார்,” என்று பெரைரா கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு குறித்து தாம் கருத்து தெரிவிக்கப் போவதில்லை என சஞ்சீவன் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அன்வார் சிறைக்குள் இருந்தாலும், அவரது முடிந்து போன வழக்கு குறித்து மேலும் பல சர்ச்சைக்குரிய விவகாரங்களும், அதிர்ச்சி தரும் தகவல்களும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.