கோலாலம்பூர், ஆகஸ்ட் 1 – நாய்களை வைத்து ரமலான் வாழ்த்து கூறுவது போலான காணொளியை வலைத்தளத்தில் வெளியிட்ட மஸ்னா முகமட் யூசோப் என்ற நாய் பயிற்றுநர் நேற்று கைது செய்யப்பட்டார்.
அந்த காணொளியை வலைத்தளத்தில் வெளியிட்டதற்கு காரணம் என்னவென்று கேட்டு மலேசிய தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த சிறப்பு அதிகாரிகள் தன்னை கேள்விக் கணைகளால் துளைத்து விட்டதாகவும், தற்போது புக்கிட் அமான் காவல்துறைத் தலைமையகத்தில் வைக்கப்பட்டிருப்பதாகவும் நேற்று செய்தியாளர்கள் தொடர்பு கொண்டு கேட்ட போது மஸ்னா கூறியுள்ளார்.
மஸ்னா மீது குற்றவியல் சட்டம் 298A பிரிவின் கீழ் மதங்களை அவமதித்தல் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பதாக அவரது வழக்கறிஞர் லத்தீபா கூறியுள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன் யூ டியூப்(Youtube) வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட அந்த காணொளியில், மஸ்னா தனது வளர்ப்பு நாய்களின் கால்களை கழுவி விடுவது போலவும், அதன் பிறகு தனது கால்களை கழுவுவது போலவும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
இதனால், Pertubuhan Martabat Jalinan Muhibah Malaysia (MJMM) என்ற அரசு சாரா இஸ்லாம் அமைப்பு ஒன்று அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் காரணம் இஸ்லாமைப் பொறுத்தவரை நாய்கள் சுத்தமில்லாதவை என்று புகார் அளித்துள்ளது.
இருப்பினும், தான் முதலில் அந்த காணொளியை 3 ஆண்டுகளுக்கு முன்பு பதிவேற்றம் செய்ததாகவும், அந்த காணொளி இஸ்லாம் மதத்தை அவமதிப்பது அல்ல மாறாக நாய்களுக்கும் சுத்தத்தை போதிப்பது என்று மஸ்னா கூறுகிறார்.
மஸ்னா வெளியிட்ட அந்த சர்ச்சைக்குரிய காணொளியை கீழ்க்காணும் இணைய தொடர்பு வழி காணலாம்..