சென்னை, ஆக. 5– முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
“ஒரு பொய்யை பல முறை சொன்னால் அது உண்மையாகிவிடும்” என்பது கோயபல்ஸின் தத்துவம். இதையும் மிஞ்சும் அளவுக்கு “இரட்டை நாக்கு”, “இரட்டை வேடம்”, “கபட நாடகம்”, “முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவது”, “அந்தர்பல்டி அடிப்பது”, “குழந்தையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது” என தன்னலத்திற்காக பல வழிமுறைகளை கருணாநிதி பின்பற்றி வருகிறார்.
அந்த வகையில், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு மக்களவையில் அறிமுகப்படுத்திய போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க., தற்போது தனது நிலையை மாற்றிக் கொண்டு, இந்த தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை ஆதரிக்கப் போவதாக தெரிவித்துள்ளது.
இதன் மூலம் கருணாநிதியின் இரட்டை நிலைப்பாடு தன்னலத்தின் வெளிப்பாடு என்பது நிரூபணமாகி உள்ளது. தன்னலத்திற்காக தமிழர்களுக்கு துரோகம் இழைப்பது என்பது கருணாநிதியால் பல பிரச்சனைகளில் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வரும் தொடர் கதை.
இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக மத்திய காங்கிரஸ் அரசு நடந்து கொள்கிறது என்று கூறி ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து தி.மு.க. விலகிக் கொள்வதாக 2013ம் ஆண்டு மார்ச் மாதம் கருணாநிதி அறிவித்தார்.
அப்போது, ஒரு செய்தியாளர், “அமைச்சரவையில் பங்கேற்காமல், வெளியே இருந்து அரசுக்கு ஆதரவு தரப்படுமா?” என கருணாநிதியிடம் கேட்டதற்கு, “எதுவும் கிடையாது” என்று பதில் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, தேசிய உணவுப் பாதுகாப்பு அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின், இது குறித்து 5.7.2013 அன்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த கருணாநிதி, “அந்த அவசரச் சட்டத்தில் சாதக, பாதகங்கள் என்ன என்று பார்க்க வேண்டும். பாராளுமன்ற கழக உறுப்பினர்களோடு அதைப் பற்றி விவாதித்திருக்கிறேன்.
இந்த அவசரச் சட்டம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுகின்ற போது, இந்த உணவுப் பாதுகாப்புச் சட்டம் குறித்து கழகத்தின் சார்பில் எங்கள் உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்துப் பேசுவார்கள்” என்று கூறினார்.
ஆனால், இதே உணவுப் பாதுகாப்புச் சட்டமுன்வடிவு கடந்த மே மாதம் நாடாளுமன்ற மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்ட போது, டி.ஆர். பாலு தலைமையில் தி.மு.க. மக்களவை உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக பத்திரிகைகளில் செய்திகள் வெளி வந்தன.
இந்த நிலையில், தமிழக மக்களுக்கு எதிரான தேசிய உணவுப் பாதுகாப்பு அவசரச் சட்டத்தினை ஆதரிக்க அடித் தளம் அமைத்துக் கொண்டிருக்கிறார் கருணாநிதி. தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், “இந்தச் சட்டம் சாதாரண மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. ஏழைகள் மற்றும் சாதாரண மக்களுக்கு பயன் அளிக்கக் கூடிய இந்தச் சட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும்?” என்று கூறியதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளி வந்துள்ளன. “கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும்” என்ற பழமொழிக்கேற்ப தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சுயரூபம் வெகு விரைவில் அம்பலமாகிவிட்டது.
கருணாநிதியின் இரட்டை நாவிற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டமுன்வடிவு குறித்து தமிழக அரசின் கருத்து கேட்கப்பட்ட போதே, இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து 20.12.2011 அன்றே பாரதப் பிரதமருக்கு நான் கடிதம் ஒன்று எழுதி இருந்தேன். அந்தக் கடிதத்தில், அனைவருக்கும் பயன்படக் கூடிய பொது விநியோகத் திட்டம் தமிழகத்தில் பல்லாண்டு காலமாக சிறப்பாக நடைபெற்று வருகிறது என்றும்; இந்தத் திட்டத்தின் மூலம் விலை ஏதுமில்லாமல் அரிசி வழங்கப்படுவதோடு கோதுமை, சர்க்கரை, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, பாமாயில் போன்ற பொருட்களும் மானிய விலையில் வழங்கப்படுகின்றன என்றும்;
இந்தத் திட்டத்திற்கென ஆண்டொன்றுக்கு 5,000 கோடி ரூபாய் மானியம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது என்றும்; இந்தத் திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது என்றும் குறிப்பிட்டு இருந்தேன். இது மட்டுமல்லாமல், குழப்பமும், தவறுகளும் நிறைந்த மத்திய அரசின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டால், தமிழ் நாடு அரசுக்கு மிக அதிகமான கூடுதல் செலவு ஏற்படும் என்று நான் சுட்டிக் காட்டியதோடு, உணவுப் பாதுகாப்பு மசோதாவில் முன்னுரிமை குடும்பங்கள், பொதுக் குடும்பங்கள் என இரு வகைகளாக மக்கள் பிரிக்கப்பட்டு அதற்கேற்ப அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளதும், 75 விழுக்காடு கிராமப்புற மக்களும், 50 விழுக்காடு நகர்ப்புற மக்களும் இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவார்கள் என்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என்றும், இந்த மசோதா மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் செயல் என்றும் நான் கோடிட்டுக் காட்டியிருந்தேன்.
தேசிய உணவுப் பாதுகாப்பு குறித்த அவசரச் சட்டத்தில், “முன்னுரிமைக் குடும்பங்கள்” என கண்டறியப்பட்ட குடும்பங்களில் உள்ள ஒவ்வொருவரும் மாதம் ஒன்றுக்கு 5 கிலோ உணவு தானியத்தை மானிய விலையில் பெறத் தகுதியுடையவர்கள் என்றும்; ஊரக மக்கள் தொகையில் அதிகபட்சம் 75 விழுக்காடு தகுதியுள்ள குடும்பங்களைச் சார்ந்த நபர்களும், நகர்ப்புற மக்கள் தொகையில் அதிகபட்சம் 50 விழுக்காடு தகுதியுள்ள குடும்பங்களைச் சார்ந்த நபர்களும் மானிய விலையில் உணவுத் தானியங்களை பெறுவர் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அனைத்து குடும்பங்களுக்கும் விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வரும் சூழ்நிலையில், “முன்னுரிமை குடும்பங்கள்” என வரையறை செய்து, அவர்களுக்கு மட்டும் உணவு தானியத்தை மானிய விலையில் வழங்குவது என்பது தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பொது விநியோகத் திட்டத்தையே சீர்குலைக்கும் செயலாகும்.
ஏழை, எளிய மக்களுக்கு என வழங்கப்படும் சலுகைகள் ஏனையோரால் பறிக்கப்பட்டு உண்மையான பயனாளிகள் பயனடைய மாட்டார்கள் என்பதே இது போன்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பொது விநியோகத் திட்டத்தின் அனைத்திந்திய வரலாறு ஆகும். எனவே தான், தமிழ்நாட்டில் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது, மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணைச் செயலாளர், தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தைப் பொறுத்தவரை 62.55 விழுக்காடு ஊரகப் பகுதி மக்கள் மற்றும் 37.79 விழுக்காடு நகர்ப்புற பகுதி மக்கள் மட்டுமே இந்தத் திட்டத்தின்கீழ் பயனடைய தகுதியுடையவர்கள் என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதன்படி பார்த்தால், தமிழ கத்திற்கு மாதம் ஒன்றுக்கு 2.96 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் அரிசியில் சுமார் 1 லட்சம் டன் குறைக்கப்பட்டு விடும். இந்தப் பற்றாக்குறை அரிசியை நாம் எங்கிருந்து பெறுவது? இதனைப் பெறுவதற்கு வெளிச் சந்தையில் தான் கொள்முதல் செய்ய வேண்டி வரும்.
இது போன்ற நிலை ஏற்பட்டால், தமிழக அரசுக்கு கூடுதலாக ஆண்டொன்றுக்கு 3,000 கோடி ரூபாய் செலவு ஏற்படும். வறட்சிக் காலங்களில் வெளிச் சந்தையில் அரிசி கிடைக்காத சூழ்நிலை வருகின்ற போது பொது விநியோகத் திட்டத்திற்கே பெரும் நெருக்கடி ஏற்படும்.
நகர்ப்புறங்களில் உணவு தானிய உற்பத்தி மேற்கொள்ளப்படவில்லை என்பதன் அடிப்படையில், நகர்ப்புற மக்கள் குறைந்த விலையில் உணவுப் பொருட்களை பெறுவதற்காகத் தான் பொது விநியோகத் திட்டமே ஆரம்பிக்கப்பட்டது.
இது மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள மிகப் பெரிய மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் 49 விழுக்காடு மக்கள் நகர்ப் புறங்களில் வசித்து வருகின்றனர். இது போன்ற சூழ்நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 37.79 விழுக்காடு நகர்ப்புற மக்கள் மட்டுமே தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியுடையவர்கள் என மத்திய அரசு தெரிவித்து இருப்பது முற்றிலும் நியாயமற்ற செயல். 100 விழுக்காடு மக்களுக்கும் அரிசி வழங்காத ஒரு திட்டத்தை எப்படி உணவுப் பாதுகாப்பு என்று கூறுவது?
நாடு முழுமைக்கும் ஒதுக்கப்பட்டுள்ள சராசரி எண்ணிக்கை கூட தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படவில்லை என்பது வேதனை அளிக்கிறது. குடும்பங்களின் மாதாந்திர நுகர்வோர் செலவினத்தை அடிப்படையாகக் கொண்டு தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பு எடுத்த புள்ளி விவரத்தினை அடிப்படையாகக் கொண்டு, முன்னுரிமை குடும்பங்களின் எண்ணிக்கையை வரையறுத்து, அதன் அடிப்படையில் மாநிலங்களுக்கான உணவு தானிய அளவை நிர்ணயிக்கும் முறை முறையற்றது.
இது மட்டுமல்லாமல், மத்திய அரசு வரையறுத்துள்ள எண்ணிக்கைக்கு ஏற்ப தகுதியுள்ள குடும்பங்களை கண்டறிய வேண்டிய கடமை மாநில அரசுகளைச் சார்ந்ததாகும் என்று அந்த அவசரச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது, காலணியின் அளவுக்கு ஏற்ப காலை வெட்டிக் கொள்ளச் சொல்வது போல் அமைந்துள்ளது. மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள சமூக பொருளாதார இன வாரியான கணக்கெடுப்பு இன்னமும் முடிவடையாத சூழ்நிலையில்;
வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களை அடையாளம் காணுவதற்கான வழிகாட்டு முறைகளை மத்திய அரசு இன்னமும் வகுக்காத சூழ்நிலையில்; மத்திய அரசு வரையறுத்துள்ள எண்ணிக்கைக்கு ஏற்ப மாநில அரசுகள் தகுதியுள்ள குடும்பங்களை கண்டறிய வேண்டும் என்று கூறுவது “போகாத ஊருக்கு வழி தேடுவது போல்” அமைந்துள்ளது. இது நடைமுறைக்கு ஒவ்வாத, சாத்தியமற்ற செயலாகும்.
அனைத்து மக்களுக்கும் உணவுப் பாதுகாப்பு அளிப்பது தான் ஒரு ஜனநாயக அரசின் கடமையாகும். அவ்வாறின்றி, மத்திய அரசால் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கைக்கு ஏற்ப குடும்பங்களை மாநில அரசுகள் அடையாளம் காண வேண்டும் என்று கூறுவது, தமிழகத்தைப் பொறுத்தவரை, அனைவருக்கும் அளிக்கப்பட்டு வரும் உணவுப் பாதுகாப்பை குறைத்துக் கொள்ளச் சொல்வது போல் உள்ளது. இது நியாயமற்ற செயல் ஆகும்.
மேலும், முன்னுரிமை குடும்பங்களை மாநில அரசுகள் அடையாளம் காணும் வரை தான் தற்போது வழங்கப்படும் அளவுக்கு உணவு தானியம் வழங்கப்படும் என்ற காப்புரை இந்த அவசரச் சட்டத்தில் இடம் பெற்று உள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் தமிழகத்திற்கு தற்போது வழங்கப்பட்டு வரும் அரிசியின் அளவு குறைக்கப்பட்டுவிடும் என்பது தான் நிதர்சனமான உண்மை.
மத்திய அரசின் பொறுப்புகள் என வரையறுக்கப்பட்டுள்ள அத்தியாயத்தில், “தகுதி வாய்ந்த” குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டிய தேவையான உணவு தானியங்களை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. இதிலிருந்து, தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் வழங்குவதற்கு தேவையான அரிசியை மத்திய அரசு தராது என்பது தெள்ளத் தெளிவாகிறது.
உணவுப் பொருட்களின் மானிய விலையை பொறுத்த வரையில், கிலோ ஒன்றுக்கு மூன்று ரூபாய் என்ற வீதத்தில் அரிசி மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் தான் வழங்கப்படும் என்றும், அதன் பின்னர், குறைந்தபட்ச ஆதார விலைக்கு மிகாமல் மத்திய அரசால் அவ்வப்போது நிர்ணயிக்கப்படும் விலையில் வழங்கப்படும் என்றும் தேசிய உணவுப் பாதுகாப்பு அவசரச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதாவது, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு கிலோ அரிசியினை 20 ரூபாய் விலை கொடுத்து வாங்கக் கூடிய நிலைமை ஏழை, எளிய மக்களுக்கு ஏற்படும். தற்போது வழங்கப்பட்டு வருவது போல் அப்போதும் விலையில்லாமல் அரிசி வழங்க பல்லாயிரம் கோடி ரூபாயை கூடுதலாகச் செலவழிக்கக் கூடிய நிலைமை தமிழக அரசுக்கு ஏற்படும். இது மாநில அரசின் நிதி நிலைக்கே பேராபத்தாக முடியும்.
இந்த அவசரச் சட்டத்தில், மத்திய அரசினால் தேவையான அளவு உணவுப் பொருட்களை வழங்க இயலவில்லை எனில், அதற்குரிய நிதி மாநில அரசுக்கு வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதிலிருந்து மத்திய அரசு உணவு தானியத்தை வழங்க வேண்டிய தன்னுடைய பொறுப்பை தட்டிக் கழிக்கிறது என்பது தெளிவாகிறது.
எனவே, உணவுப் பாதுகாப்பை வழங்கும் சட்டம் என்று மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், அவசரச் சட்டத்தில் உள்ள ஷரத்துகளைப் பார்க்கும் போது, உணவுப் பாதுகாப்பை இது உறுதி செய்யவில்லை என்பது தெளிவாகிறது.
தேசிய உணவுப் பாது காப்புச் சட்டத்தில் உள்ள குறைபாடுகளை எல்லாம் சுட்டிக் காட்டி அதில் என்னென்ன திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதைத் தெரிவித்து நான் பாரதப் பிரதமருக்கு 2.8.2013 அன்று ஒரு கடிதம் எழுதியுள்ளேன்.
அந்தக் கடிதத்தில், தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதாவினை நாடாளு மன்றத்தில் வைப்பதற்கு முன்பு, தமிழ்நாடு அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள திருத்தங்களை மசோதாவில் சேர்க்க வேண்டும் என்று பிரதமரை கேட்டுக் கொண்டுள்ளேன்.
ஆனால், தமிழக மக்களுக்கு அனைத்து விதங்களிலும் எதிராக உள்ள தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை தி.மு.க. ஆதரிக்கும் என்று டி.கே.எஸ். இளங்கோவன் மூலமாக சொல்ல வைத்திருக்கிறார் கருணாநிதி.
தன் மகளுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைத்ததும், தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களை கருணாநிதி மறந்துவிட்டார் போலும்! தன்னலத்திற்காக தமிழக மக்களை அடகு வைக்கும் செயல் நியாயமா என்பதை கருணாநிதி சிந்தித்துப் பார்க்க வேண்டும். கருணாநிதியின் இது போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளைப் பார்க்கும் போது “எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?” என்ற புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பாடல் தான் என் நினைவிற்கு வருகிறது.
“மாநில சுயாட்சி” என்ற கொள்கையுடன் பேரறிஞர் அண்ணாவால் துவங்கப்பட்ட தி.மு.க. என்கிற இயக்கத்தை தன்னலத்திற்காக பயன்படுத்துவதை தமிழக மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள். தமிழக மக்களுக்கு எதிரான, பயன்படாத, உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யாத இந்த தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களுக்கு உணவுப் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தும் இந்தச் சட்டத்தை தி.மு.க. ஆதரிப்பது என்பது ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் இழைக்கும் துரோகமாகும்.
இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார்.