சென்னை, ஆக. 7– இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தின் 13–வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தியும், இலங்கையில் நடைபெற உள்ள ‘‘காமன்வெல்த்’’ மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தியும், தமிழக மீனவர்களை பாது காத்திடவும், இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களர் குடியேற்றத்தை தடுத்திடவும், டெசோ அமைப்பு சார்பில் நாளை தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
சென்னை வள்ளூவர் கோட்டம் அருகில் நாளை காலை 9.30 மணிக்கு நடை பெறும் ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பங்கேற்று கண்டன உரை நிகழ்த்துகிறார். தென் சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ., வடசென்னை மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் முன்னிலை வகிக்கின்றனர். இதில் பேராசிரியர் சுபவீர பாண்டியன் உள்பட பலர் பங்கேற்று பேசுகின்றனர்.
தென் சென்னை மாவட்ட சென்னை மாவட்டம் சார்பில் நடைபெறும் இந்த போராட்டத்தில் ஏராளமான தி.மு.க.வினர் பங்கேற்க உள்ளனர்.
இதேபோல் காஞ்சீபுரத்தில் கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அன்பரசன் தலைமை தாங்குகிறார். முன்னாள் அமைச்சர் துரைமுருகன் சிறப்புரையாற்றுகிறார். இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான தி.மு.க.வினர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.