Home கலை உலகம் ‘தலைவா’ – முதல் காட்சி திரைவிமர்சனம்! “ஏற்கனவே அரைத்த மாவு”

‘தலைவா’ – முதல் காட்சி திரைவிமர்சனம்! “ஏற்கனவே அரைத்த மாவு”

1079
0
SHARE
Ad

th1

ஆகஸ்ட் 9 – தமிழ் சினிமாவின் அரைத்த மாவு படங்களில் ‘தலைவா’ படமும் ஒன்று என்று மிக உறுதியாக சொல்லமுடியும். நாயகன் படத்திலிருந்து கொஞ்சம், தேவர் மகன் படத்திலிருந்து கொஞ்சம் என்று ஆங்காங்கே சில மும்பை தாதா படங்களின் கதையை அரைத்து ஒன்றாக சேர்த்து ‘தலைவா’ என்று கொடுத்திருக்கிறார் இயக்குனர் விஜய்.

முதல் நாள், முதல் காட்சி, மலேசியாவிலும் திரையரங்கம் நிரம்பி வழிகிறது. படம் ஆரம்பித்தது முதல் விசில் சத்தம் காதைப் பிளக்கிறது.ஆனால் இடைவேளைக்குப் பிறகு திரையரங்கில் ஒரு சின்ன சத்தத்தையும் காணவில்லை.

#TamilSchoolmychoice

இந்தியாவின் மும்பை நகரம், வெள்ளை பைஜாமா போட்ட தாதாக்கள், சேரி பகுதி, யாரையாவது ஒருவரை தலைவனாக தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் மக்கள், பழிக்குப் பழி, ரத்தத்துக்கு ரத்தம் இன்னும் எத்தனை நாளைக்குயா இதே மாதிரி படங்களை கொடுத்து மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கப் போறீங்க?

சந்தானம் மட்டும் இல்லாவிட்டால் இந்த படத்தை இடைவேளை வரை கூட பார்த்திருக்க முடியாது. ஏமாற்றமாய் அமர்ந்திருக்கும் ரசிகர்களை சமாதானப்படுத்த படம் முழுவதும் ஆங்காங்கே நடிகர் விஜயின் முந்தைய படங்களில் அவர் பேசுவதைப் போன்ற வசனங்களை பேசி சிரிக்க வைத்திருக்கிறார் சந்தானம்.

இன்னுமா இந்த மும்பை மாறவில்லை என்று நடிகர் கமலும், மணிரத்தினமும் இப்படத்தை பார்த்தல் நிச்சயம் கேட்பார்கள். காரணம் நாயகன் படத்தில் காட்டிய அதே மும்பையை அப்படியே ‘தலைவா’ படத்தில் காட்டியிருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவில் நீரவ் ஷா ஒளிப்பதிவு அழகு. ஜீ.வி பிரகாஷ் இசையில் ‘தமிழ் பசங்க’, ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’ பாடல் ஆறுதல்.

படத்தின் கதை

மும்பையை ஆண்டு கொண்டு இருக்கும் தாதா ஒருவரை பகைத்துக் கொள்கிறார் தர்மதுரை (சத்யராஜ்). அவன் செய்யும் தவறுகளை தட்டிக்கேட்கிறார். இதனால் சத்யராஜை தீர்த்துக் கட்ட முடிவு செய்து வீட்டிற்கு வருகிறார்கள் தாதாவின் ஆட்கள்.

சத்யராஜை துப்பாக்கியால் சுட முயற்சிக்கும் போது அந்த நேரம் இடையில் புகுந்து துப்பாக்கி குண்டுகளை தன் மேல் தாங்கிக் கொண்டு கணவனுக்காக உயிர் தியாகம் செய்கிறார் மனைவி ரேகா. மனைவியைக் கொன்றவர்களை தனி ஆளாக தேடிச் சென்று அந்த மும்பை தாதா மற்றும் அவரது ஆட்களை அழித்து விடுகிறார் சத்யராஜ்.

ஆனால் அந்த தாதாவின் மகனை மட்டும் பாவம் பார்த்து கொல்லாமல் விட்டு விடுகிறார் (அப்பதானே படத்தோட ரெண்டாவது பாதிக்கு கதை இருக்கும்)

அதன் பிறகு அந்த இடத்தில் சத்யராஜை வைத்து அவரை மும்பைக்கே தாதாவாக மாற்றி விடுகிறார்கள் அப்பகுதி மக்கள். தான் இங்கு தாதாவாக இருப்பது தன் மகன் விஜய்க்கு தெரிந்து விடக்கூடாது என்ற காரணத்திற்க்காக தனது நண்பரான நாசரிடம் கொடுத்து வளர்க்க சொல்கிறார் சத்யராஜ்.

நாசர் தன் மகன் சந்தானத்தையும், சத்யராஜ் மகன் விஜயையும் அழைத்துக் கொண்டு ஆஸ்திரேலியா சென்று அங்கு ஒரு மினரல் வாட்டர் நிறுவனம் தொடங்கி மகனையும், வளர்ப்பு மகனையும் வளர்த்து பெரிய ஆளாக்கி தனது கடமை முடிந்தது என்று போய் சேர்ந்து விடுகிறார்.

ஆஸ்திரேலியாவில் ‘தமிழ் பசங்க’ என்ற நடன குழு ஒன்றை நடத்தி வரும் நடிகர் விஜய்க்கு அமலா பாலின் மீது காதல் வருகிறது. கல்யாணம் செய்வதற்கு தன் நிஜத் தந்தை சத்யராஜிடம் சம்மதம் வாங்க இந்தியா வருகிறார். அந்த நேரத்தில், பழைய தாதாவின் மகன் பீமா சத்யராஜை பழிக்குப் பழி வாங்கி அவரை கொன்றுவிடுகிறான்.

அதன் பிறகு என்ன நடக்கும் என்பது இத்தனை வருட தமிழ் சினிமா பார்த்து பழக்கப்பட்ட ரசிகர்களாகிய உங்களுக்கே தெரியும். இதுல நான் என்ன புதுசா சொல்லப்போறேன்?

படத்தின் பலம்

படத்தின் பலம் சந்தானம் என்று தான் சொல்ல வேண்டும். படம் பார்க்கும் ரசிகர்களை எந்த விஷயம் ரசிக்க வைக்கிறதோ அது தான் படத்தின் பலம். ‘தலைவா’ படத்தில் சந்தானம் பேசும் வசனங்கள் தான் ரசிகர்களை அவ்வப்போது கொஞ்சமாவது ரசிக்க வைக்கிறது.

உதாரணமாக, “யு டியூப் நம்ம ஊரு கிழவிங்க மாறி ப்ரோ … உலகமெல்லாம் போய் விஷயத்தை பரப்புதுங்க”, “அடுத்தவன் மாங்காய் ல ஊறுகா போட நினைக்கிறது தப்பு ப்ரோ” போன்ற வசனங்கள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.

நீரவ் ஷா ஒளிப்பதிவில் ஆஸ்திரேலியா இன்னும் அழகாகத் தெரிகிறது.

தமிழ் பசங்க பாடலில் விஜய் ஆடும் நடனம் கொஞ்சம் ஆறுதல்.

மற்றபடி, படத்தில் ரசிப்பதற்கு ஒன்றும் இல்லை.

படத்தின் பலவீனம்

தமிழ் சினிமாவில் கதைக்கு ஏற்பட்டுள்ள படு பஞ்சத்தை ‘தலைவா’ படம் உணர்த்தியிருக்கிறது. படம் தொடங்கியது முதல் இறுதி வரை வரும் மும்பை காட்சிகள் அனைத்தும் ரசிகர்களுக்கு அத்துபடி. காரணம் அந்த அளவிற்கு இது போன்ற கதையம்சம் கொண்ட படங்கள் ஏற்கனவே பல முறை வந்துள்ளன.

சத்யராஜை ‘அண்ணா’ என்று அழைக்கும் மும்பை வாழ் மக்கள். அவரது மகன் விஜய் தலைவனானதும் ‘விஷ்வா பாய்’ என்று அழைக்கிறார்கள். அதன் பிறகு படம் முழுவது ‘பாட்ஷா பாய்’ போல் ‘விஷ்வா பாய் …விஷ்வா பாய்’ என்று மக்களின் கூக்குரல் வேறு (ஷ்யப்பா …முடியல)

இந்த அடாவடி தாதாக்களை அழிக்கும் காவல்துறை அதிகாரியாக அமலா பாலாம்… ஆங்கிலப்படங்களில் வருவது போன்று உடம்பை ஒட்டிய இறுக்கமான ஆடையை அணிந்து கொண்டு, துப்பாக்கியை கையில் வைத்துக்கொண்டு அங்கும் இங்கும் ஆட்டி ஏதோ முயற்சி செய்திருக்கிறது பொண்ணு…(உங்கள பாத்தா தாதாக்களுக்கு பயமே வராது அமலா)..

கதை, திரைக்கதை, வசனங்கள், நடிப்பு, காட்சிகள் என்று எதிலும் ரசிக்கக்கூடிய அளவில் ஒன்றும் இல்லை. முதல் பாதியில் ஓரளவிற்கு நம்மை கட்டுப்படுத்த முடிகிறது. இரண்டாவது பாதியில் படம் எப்படா முடியும் என்கிற அளவிற்கு திரைக்கதை ஜவ்வாக இழுக்கிறது.

இறுதிக்காட்சியில், வில்லனுக்கும், கதாநாயகனுக்கும் சண்டை நடக்கிறது. உடம்பில் இரண்டு இடங்களில் கத்தி குத்து விழுந்தும் இறுதியில் வில்லனை அழித்து விடுகிறார் கதாநாயகன். அதன் பின்னர் காவல்துறை வந்து படத்திற்கு சுபம் போடுகிறார்கள் (இதத் தானே கடந்த 60 வருஷங்களா பண்ணிக்கிட்டு இருக்கீங்க)

‘தலைவா’ – “நாலு விஜய் ரசிகர்கள் படம் பாக்கனும்னா …. எதுவும் தப்பில்லை ..” என்ற நோக்கில் எடுக்கப்பட்டிருக்கும் ஒரு படம் … (போதும் தலைவா … எங்களை விட்டுருங்க)

– பீனிக்ஸ்தாசன்

‘தலைவா’ படத்தின் முன்னோட்டத்தை கீழ்காணும் இணைய வழித் தொடர்பு மூலம் காணலாம்

 

please install flash