சென்னை, ஆகஸ்ட் 13 – பல்வேறு முனைகளிலும் சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கும் விஜய் நடித்த ‘தலைவா’ படம் இன்னும் தமிழகத்தில் வெளியாகாமல் தத்தளிக்கின்றது.
மற்ற மாநிலங்களிலும், மற்ற உலக நாடுகளிலும் வெளியாகி வெற்றியோட்டம் கண்டு வரும் ‘தலைவா’ படத்தின் திரையீடு தாமதம் ஆவதால், அதனால் படத் தயாரிப்பாளரும், விநியோகஸ்தர்களும் பெரிய அளவில் நஷ்டத்தை எதிர்நோக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. காரணம், கள்ள ஒளிநாடாக்கள் சந்தையில் வெளியாகி விட்டதால், விஜய் ரசிகர்களும், சினிமா ரசிகர்களும் தற்போது இந்த கள்ள ஒளிநாடாவில் படத்தைப் பார்த்து வருகின்றார்கள்.
இதனால், படம் வெளியாகும் போது அதன் வசூல் பெருமளவில் பாதிக்கப்படும் சாத்தியங்கள் நிலவுகின்றன. படம் வெளியாகாமல் இருப்பதற்கு மற்றொரு காரணம் படத்திற்கு வரிவிலக்கு கிடைக்காததுதான் காரணம் என்றும் கூறப்படுகின்றது.
படத்தின் கதையும், காட்சிகளும் உகந்ததாக இல்லை என்ற காரணத்தால் படத்திற்கு தமிழக அரசு வரிவிலக்கு அளிக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.
இருப்பினும், தலைவா படம் சர்ச்சையில் சிக்கியதற்கு காரணம் பின்னணியில் நடந்த சில அரசியல் விவகாரங்களே என்றும் தமிழக பத்திரிக்கைகள் ஆரூடம் கூறியுள்ளன. தலைவா படத்தின் தொலைக்காட்சி உரிமம் ஜெயா டிவிக்கு வழங்கப்படாததே இதற்கான காரணம் என்றும் கூறப்படுகின்றது.
‘ஐந்து,ஐந்து,ஐந்து’ படத்திற்கு அடித்தது அதிர்ஷ்டம்!
இதற்கிடையில் நடிகர் பரத் நடிப்பில் இயக்குநர் சசியின் இயக்கத்தில் ‘ஐந்து.ஐந்து.ஐந்து’ படம், அடுத்த ஓரிரு வாரங்களில் வெளியாகவிருந்தது. தலைவா படத்திற்கு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த திரையரங்குகளில், அவசரம் அவசரமாக தலைவா படத்திற்கு இந்தப் படம் திரையிடப்பட்டது.
படமும் நன்றாக இருப்பதாக விமர்சனங்கள் வெளிவர தற்போது, தமிழ் நாட்டில் ஓடிக் கொண்டிருக்கும் தமிழ்ப் படங்களில் ‘ஐந்து’ படம்தான் வசூலில் முன்னணி வகிக்கின்றது. ‘தலைவா’ படத்தின் வெளியீடு தள்ளிப் போனதால் அதிர்ஷ்டம் அடித்தது ‘ஐந்து’ படத்திற்குத்தான்.
தலைவா படம் இன்னும் தாமதமானால், அதனால் ‘ஐந்து,ஐந்து,ஐந்து’ படம் மேலும் வசூலைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனுஷ் நடித்த ‘மரியான்’ படமும் எதிர்பார்த்த அளவுக்கு அமையாத காரணத்தால், அந்தப் படத்திற்கும் கூட்டமில்லை.
இந்த நிலையில்தான் தலைவா படத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சினிமா ரசிகர்கள் ‘ஐந்து, ஐந்து, ஐந்து’ படத்திற்கு திரண்டு வர படமும் வசூலில் வெற்றி பெற்று வருகின்றது.