ஆக. 17- நடிகர் விஜய் நடித்துள்ள ‘தலைவா’ திரைப்படம் கடந்த 9-ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, தமிழகத்தில் இன்னும் இப்படம் வெளியாகவில்லை. ஆனால் மற்ற மாநிலங்களில் படம் வெளியானது.
படத்தை வெளியிட முதல்வர் ஜெயலலிதா உதவ வேண்டும் என்று சமீபத்தில் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் அக்கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை.
மேலும், ‘தலைவா’ பட பிரச்சினை தொடர்பாக உண்ணாவிரதம் இருக்க படக்குழு சார்பில் காவல்துறையினரிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால், காவல்துறை அனுமதி அளிக்க மறுத்துவிட்டது.
இந்நிலையில் தி.மு.க. எம்.எல்.ஏ.வும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜெ.அன்பழகன், தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழகத்தில் எங்களிடம் 300 திரையரங்குகள் உள்ளன. விஜய் விரும்பினால் ‘தலைவா’ படத்தை வெளியிட தயாராக இருக்கிறோம்.” எனக் கூறியுள்ளார்.
மேலும், ‘தலைவா’ வெளியீட்டு உரிமை இப்போது எனக்கு வந்தால் கூட படத்தை நாளை காலை ரிலீஸ் செய்ய முடியும் என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி ஒருபுறம் இப்பட விவகாரத்தில் நடிகர் விஜய்க்கு ஆதரவுக்கரம் நீட்ட, மறுபுறம் அவரது கட்சி எம்.எல்.ஏ.வான அன்பழகன், தலைவா’ படத்தை வெளியிட தயார் என அறிவித்திருப்பது, இவ்விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.