Home நாடு உலகத் தமிழ் இணைய மாநாடு வெற்றிகரமாக நிறைவு கண்டது! நிறைவு விழாவில் அமைச்சர் சுப்ரா!

உலகத் தமிழ் இணைய மாநாடு வெற்றிகரமாக நிறைவு கண்டது! நிறைவு விழாவில் அமைச்சர் சுப்ரா!

651
0
SHARE
Ad

IMG_8619

#TamilSchoolmychoice

கோலாலம்பூர், ஆகஸ்ட் 17 – கடந்த மூன்று நாட்களாக பல்வேறு ஆய்வரங்கங்கள், உரைகள், கலை நிகழ்வுகள் என நடைபெற்ற 12வது உலகத் தமிழ் இணைய மாநாடு இன்று மாலையோடு ஒரு நிறைவுக்கு வந்தது.

நிறைவு விழாவில் கலந்து கொண்ட ம.இ.கா தேசியத் துணைத் தலைவரும் சுகாதாரத் துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் நிறைவுரை ஆற்றி மாநாட்டை முடித்து வைத்தார்.

நிறைவு விழாவில் தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்க தலைமைச் செயல் அதிகாரி டத்தோ சகாதேவனும் கலந்து கொண்டார்.

டாக்டர் சுப்ரமணியம் தனது உரையில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் உலகத் தமிழ் இணைய மாநாட்டை மலேசியாவுக்கு கொண்டு வந்திருக்கும் உத்தமம் மலேசியக்  குழுவினருக்குப் பாராட்டு தெரிவித்தார்.

அண்மையக் காலங்களில் கணினி, இணையம் தொடர்பான தகவல் தொழில் நுட்பங்கள் நமது வாழ்க்கை முறையையே மாற்றி அமைத்துவிட்டதாகத் தெரிவித்த அமைச்சர் நாமும் இந்த தொழில் நுட்பத்தோடு இணைந்து வாழ வேண்டிய நிலைமைக்கு ஆளாகிவிட்டதை சுட்டிக் காட்டினார்.IMG_8623

தகவல் தொழில் நுட்பத்தால் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தால் உலகம் சுருங்கி விட்டது, நாட்டின் எல்லைகள் நொறுங்கி விட்டன எனக் கூறிய சுப்ரா இதன் மூலம் இளைய தலைமுறையினர் அயல் நாட்டிலுள்ள தங்களின் நண்பர்கள், சொந்த பந்தங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள முடிகின்றது என்றும் கூறினார்.

“குறிப்பாக, நாட்டின் புறநகர் பகுதிகளில் இணையம் மூலம் பெருமளவில் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடிந்திருக்கின்றது. உதாரணமாக, எனது செகாமட் தொகுதியில் மண்சாலையைத் தாண்டி செல்லக் கூடிய ஒரு சாதாரண கிராமத்திற்குள் இணைய மற்றும் தகவல் தொழில் நுட்ப தொடர்புகளின் மூலம் அந்தக் கிராம மக்களிடையே தொடர்புகளை ஏற்படுத்தி முன்னேற்றங்களைக் கொண்டுவர முடிந்தது” என்றும் டாக்டர் சுப்ரா கூறினார்.

மலேசியாவில் ஃபேஸ் புக் எனப்படும் முகநூல் பெருமளவில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருவதையும், மக்கள் தொகை விகிதாச்சாரத்தை வைத்துப் பார்க்கும்போது அதிக அளவிலான விகிதாச்சாரத்தில் மலேசிய மக்கள் முகநூலைப் பயன்படுத்தி வருகின்றார்கள் என்பதையும் தெரிவித்த சுப்ரா, இதுவும் தகவல் தொழில் நுட்ப முன்னேற்றத்தால் ஏற்பட்ட வளர்ச்சி என்பதை சுட்டிக் காட்டினார்.

அமைச்சரின் உரைக்கு முன்னதாக உத்தமம் அமைப்பின் தலைவரான சி.எம்.இளந்தமிழ் சிறப்புரை ஆற்றினார்.

சுப்ராவின் நிறைவுரையை கீழ்க்காணும் காணொளி வழிக் காணலாம்