Home நாடு அரசாங்க சம்பளம் கொடுக்கப்படாத வரை, குடும்ப உறுப்பினர்கள் அமைச்சரின் உதவியாளராக இருக்கலாம்! – நஜிப் கருத்து!

அரசாங்க சம்பளம் கொடுக்கப்படாத வரை, குடும்ப உறுப்பினர்கள் அமைச்சரின் உதவியாளராக இருக்கலாம்! – நஜிப் கருத்து!

656
0
SHARE
Ad

najib12ஆகஸ்ட் 16 – “ஓர் அமைச்சரோ அல்லது அரசாங்க நிர்வாகத்தில் உள்ள ஒருவரோ தனது குடும்ப உறுப்பினர் ஒருவரை தாராளமாக தனது உதவியாளராக நியமித்துக் கொள்ளலாம். அதில் தவறேதும் இல்லை. ஆனால், அரசாங்க சம்பளம் எதையும் அவர் பெறாத வரையில் இதில் தவறேதும் இல்லை” என பிரதமர் நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

சுற்றுலாத் துறை அமைச்சர் டத்தோ நஸ்ரி தனது மகனை தனது சிறப்பு உதவியாளராக நியமித்துள்ளது குறித்து எழுந்துள்ள  சர்ச்சை தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் கேள்வி தொடுத்தபோதே பிரதமர் இவ்வாறு கூறினார்.

தனக்குத் தெரிந்த வரையில் குறித்து, நஸ்ரியின் மகன், அமைச்சரின் உதவியாளராக அரசாங்க சம்பளம் பெறும் அதிகாரபூர்வ அரசாங்க பதவியில் இல்லை என்றும் நஜிப் மேலும் தெரிவித்தார். அதிகாரபூர்வமற்ற முறையில் தனது தந்தைக்கு நஸ்ரியின் மகன் உதவி வருவதாகவும், அரசாங்க சார்பில் அவருக்கு சம்பளமோ, அலவன்ஸ் போன்ற சிறப்பு வருமானமோ வழங்கப்படவில்லை என்றும் நஜிப் கூறினார்.

நஸ்ரியின் மகன் முகமட் நெடிம் அவரது அமைச்சிலேயே அவருக்கு உதவியாளராக பணியாற்றி வருவது குறித்து சில தரப்பினர் கேள்வி எழுப்பியிருந்தனர்.

தனது மகனின் பதவி குறித்து விளக்கமளித்த அமைச்சர் நஸ்ரி எந்தவித அதிகாரபூர்வ பதவியும் தனது மகனுக்குத் தரப்படவில்லை என்றும் பேராக்கிலுள்ள தனது நாடாளுமன்றத் தொகுதி பாடாங் ரெங்காசிலுள்ள இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியிலும், மற்றும் இளைய சமுதாயத்தினரின் மேம்பாட்டுக்கான திட்டங்களுக்காகவும் பணியாற்றி வருகின்றார் என்றும் கூறியிருந்தார்.

சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சொத்து விவரங்களை அறிவித்தல்

இதற்கிடையில் மற்றொரு கேள்விக்கு பதிலளித்த நஜிப் எல்லா தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களின் சொத்துவிவரங்களை பகிரங்கமாக அறிவிப்பது தேவையில்லாத ஒன்று என்றும் கூறினார்.

அமைச்சரவை உறுப்பினர்கள் தன்னிடம் சமர்ப்பிக்கும் அவர்களின் சொத்து விவரங்கள் தேவைப்பட்டால் ஊழல் தடுப்பு ஆணையத்தால் பரிசீலிக்கப்படும் என்று குறிப்பிட்ட நஜிப், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுத் துறைகளின் நிர்வாகப் பொறுப்பில் இல்லை என்பதால் அவர்களின் சொத்து விவரங்கள் பகிரங்கமாக அறிவிக்கப்பட வேண்டியதில்லை என்றும் அவர்கள் தாராளமாக வர்த்தகத்தில் ஈடுபடலாம் என்றும் ஆனால் தாங்கள் ஆற்றும் பணிகளில் தங்களின் ஈடுபாடுகளில் முரண்பாடுகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்றும் கூறினார்.