கோலாலம்பூர், ஆகஸ்ட் 16 – உலகத் தமிழ் தகவல், தொழில் நுட்ப மன்றம் (‘உத்தமம்’) என்ற பெயரில் இயங்கும் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறும் உலகத் தமிழ் இணைய 12ஆம் மாநாடு, நேற்று மாலை, தலைநகர், மலாயாப் பல்கலைக் கழகத்தில் சுமார் 1,000 பேர் கலந்து கொள்ள கோலாகலமாகத் தொடங்கியது.
இம்மாநாட்டில் நாட்டின் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமது ஷாபெரி சீக் தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார். அத்துடன் மலாயாப் பல்கலைக்கழக துணைவேந்தர் டான்ஸ்ரீ கவுத் பின் ஜேஸ்மான், தமிழகத்தின் அண்ணா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் மற்றும் கான்பூர் (இந்தியா) இந்தியத் தொழில் நுட்பத்தின் தற்போதைய தலைவர் பேராசிரியர் டாக்டர் மு. ஆனந்தகிருஷ்ணன் ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
மேலும் இந்நிகழ்வில் உத்தமம் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரும், அந்த அமைப்பின் முன்னாள் தலைவரும், முரசு மென்பொருள்,மற்றும் செல்லினம், செல்லியல் ஆகிய செயலிகளின் வடிவமைப்பாளருமான முத்து நெடுமாறன் மையக்கருத்துரையாற்றினார்.
இந்த ஆண்டு மாநாட்டின் மையக் கருப்பொருளான ‘கையடக்கக் கணினிகளில் தமிழ்க் கணிமை’ குறித்து முத்து நெடுமாறன் அவர்கள் ஆற்றிய உரை பின்வருமாறு:-
“ இந்த மாநாட்டின் முக்கிய கருப்பொருளே கையடக்கக் கருவிகளில் தமிழ்க் கணிமை. அதாவது தமிழ் கணிமை கையடக்கக் கருவிகளில் எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என்பதைப் பற்றியும், அதன் அடுத்தகட்ட நிலை என்ன என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்வது தான் இதன் முக்கிய நோக்கம்.”
“தொழில்நுட்ப கருவிகளில் தமிழை எப்படி உள்ளிடுவது என்பது தான் எங்களின் முதல் முயற்சியாக இருந்தது. அதில் தற்போது வெற்றியும் அடைந்துள்ளோம் என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தற்போது மிகவும் பிரபலாக இருக்கும் பெரும்பாலான கருவிகளில் இயல்பாகவே தமிழை உள்ளிட முடியும் அது இன்னொரு வெற்றி.”
“எனினும், இது போன்ற பெரிய நிறுவனங்கள் தமிழை கட்டாயம் பயன்பாட்டில் வைக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. தமிழைப் பயன்பாட்டில் வைக்கவில்லை என்றாலும் அவர்களது விற்பனை எண்ணிக்கை அதிகமாகத் தான் இருக்கும். தமிழ் பயன்பாடு அதிகம் இருக்கிறது என்று அவர்களுக்குத் தெரிய வந்தால் மட்டுமே அந்த நிறுவனங்கள் தமிழின் பயன்பாட்டை அதிகரிப்பார்கள். எனவே கையடக்கக் கருவிகளில் தமிழின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் பயன்பாட்டில் வைக்கும் தமிழ் எழுத்துக்களின் தரமும் அதிகரிக்கும்” என்று தெரிவித்தார்.
மேலும், தற்போது உலக அளவில் பயன்பாட்டில் இருக்கும் தமிழ் உள்ளீட்டு செயலியான செல்லினம் மென்பொருளின் அடுத்த கட்ட நிலை குறித்தும் முத்து நெடுமாறன் அவர்கள் விளக்கமளித்தார்.