சென்னை, ஆகஸ்ட் 19 – கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி திரையிடப்படவிருந்த விஜய் நடித்த “தலைவா” திரைப்படம் வெடிகுண்டுப் புரளிகளாலும், பாதுகாப்பு காரணங்களாலும், இதுநாள்வரை தமிழ் நாட்டில் திரையிடப்பட முடியாத சூழ்நிலைஇருந்து வந்தது.
இறுதியாக சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கிடையில் சுமுகமான தீர்வு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து இந்த திரைப்படம் நாளை செவ்வாய்க்கிழமை 20ஆம் தேதி தமிழ் நாடு முழுவதும் வெளியிடப்பட தமிழக காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.
படம் வெளியிடப்பட முடியாத விவகாரத்தால். பத்திரிக்கையாளர்களுக்கு கண்ணீர்ப் பேட்டி அளித்த அதன் தயாரிப்பாளர் சந்திரப் பிரகாஷ் ஜெயின் தற்போது படத்தை வெளியிட முடியாமல், நெஞ்சு வலி காரணமாக தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தலைவா படம் வெளியிடப்பட முடியாத நிலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து படக்குழுவினர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப் போகின்றனர் என்ற அறிவிப்பும் இடையில் வெளியிடப்பட்டது. ஆனால் தமிழக காவல் துறையினர் இதற்கு அனுமதி தரவில்லை.
இன்று முதல், படம் திரையிடப்படும் திரையரங்குகளில் மீண்டும் அனுமதிச் சீட்டுகளுக்கான விற்பனை தொடங்கும் எனத் தெரிகின்றது.
தலைவா இல்லாத சூழ்நிலையில் உள்ளே நுழைந்து திரையீடு கண்ட பரத் நடித்த ‘ஐந்து, ஐந்து ஐந்து’ திரைப்படமும், இயக்குநர் சுசீந்திரனின் கைவண்ணத்தில் உருவான ‘ஆதலால் காதல் செய்வீர்’ திரைப்படமும், சிறப்பாக இருக்கின்ற காரணத்தால் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன.
இருப்பினும் முதல்நிலைத் திரையரங்குகளில் தலைவா படத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு திரையிடவுள்ளனர்.
வசூலில் சாதனை படைக்குமா?
இந்தப் படத்திற்கு முன்பு எதிர்பார்க்கப்பட்டது போன்ற அமோக வரவேற்பு கிடைக்காது என்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.
வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் ஏற்கனவே படம் வெளியாகிவிட்டதாலும், படத்தின் மீதான மதிப்பீடுகளும், விமர்சனங்களும் திருப்திகரமாக இல்லாத காரணத்தாலும் படத்திற்கு அலைமோதும் ரசிகர்கள் கூட்டம் இயல்பாகவே குறைந்து விடும் என்ற கணிப்பு ஒருபுறம் நிலவுகின்றது.
தமிழ்நாட்டின் எல்லையோரப் பகுதிகளில் உள்ள ரசிகர்கள் அண்டை மாநிலங்களுக்கு படையெடுத்து படத்தைப் பார்த்துவிட்டதால் அதனாலும் படத்தின் வசூல் பெருமளவில் பாதிக்கப்படும் என்ற நிலை மற்றொரு புறம்.
இதற்கிடையில், தமிழகத்தில் பரவலாக ஊடுருவி விட்ட தலைவா படத்தின் கள்ள ஒளிநாடாக்கள் மூலம் ரசிகர்களில் பலர் ஏற்கனவே படத்தைப் பார்த்து விட்டதாலும், திரையரங்குகளை முற்றுகையிடப்போகும் மக்களின் கூட்டம் கணிசமாகக் குறையும் என்ற எதிர்பார்ப்பு மற்றொரு புறம்.
இருந்தாலும், விஜய் படத்திற்கு இருக்கும் ஆரம்ப வரவேற்பை வைத்துப் பார்க்கும் போதும், சர்ச்சைகளால் படத்திற்கு ஏற்பட்ட விளம்பரத்தாலும், படம் வசூலில் வெற்றி பெற்றுவிடும் என்றே கூறப்படுகின்றது.