ஆகஸ்ட் 18 – உள்ளூர் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கும் மாபெரும் நிகழ்வொன்றை மலேசியக் கலைஞர் இயக்கம் 5வது முறையாக ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வு எதிர்வரும் ஆகஸ்ட் 30ஆம் நாள் பெட்டாலிங் ஜெயா சிவிக் செண்டர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மலேசியத் தமிழ் கலைஞர் இயக்கத்தின் சார்பாக விருதளிப்பு குழுவின் தலைவர் கே.பழனிசாமி (படம்) இந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.
இந்த விருதளிப்பு விழா மனித நேய மாமணி ரத்னவள்ளி அம்மையார் தலைமையில் நடைபெறுகின்றது. மலேசியத் தமிழ் கலைஞர் இயக்கத் தலைவர் கே.மழைவண்ணன் தலைமையில் விழா ஏற்பாட்டுக் குழுவினர் ஏற்பாடுகளை சிறப்பாக செய்து வருகின்றனர்.
இந்த நிகழ்வில் 10 சிறந்த கலைஞர்களுக்கு சான்றோர் விருதும், 1000 ரிங்கிட் பணமுடிப்பும் வழங்கப்படும்.
மலேசியாவில் இயல், இசை, நாடகம்ஆகிய துறைகளில் சிறப்பாக முத்திரை பதித்தவர்களான ஆழி.அருள்தாசன், சா.ஆ.அன்பானந்தன், செந்திலாதிபன், மனு ராமலிங்கம், ஆர்.பி.எஸ்.மணியம், எம்.எஸ்.கோபாலன் ஆகியோரின் நினைவாக பத்து மூத்த கலைஞர்களுக்கு வழங்கப்படும். மேலும், அவர்களுக்கு தலா 1,000 ரிங்கிட் அன்பளிப்பும் வழங்கப்படும்.
நாடகம், திரைப்படம், பாடல், இயக்குநர், தயாரிப்பாளர், வானொலி, தொலைக்காட்சி, சின்னத்திரைஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் 50 கலைஞர்களுக்கு விருதும் பாராட்டும் வழங்கப்படுவதாகவும் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்த விருதளிப்பு விழாவிற்கு நாட்டின் முக்கிய பிரமுகர்கள் பலரும், இந்திய வர்த்தகப் பெருமகன்களும் ஆதரவு தந்துள்ளனர்.
இவர்களுடன், ரத்னவள்ளி அம்மையாரும் இந்த விருதளிப்பு விழாவின் வெற்றிக்கு பெருமளவில் உதவியும் ஒத்துழைப்பும் வழங்கியுள்ளதாக கே.பழனிசாமி பத்திரிக்கைகளுக்கு விடுத்த அறிக்கையில் கூறியுள்ளார்.