Home நாடு போட்டியா? இல்லையா? சுப்ரா நாளை அறிவிப்பு!

போட்டியா? இல்லையா? சுப்ரா நாளை அறிவிப்பு!

619
0
SHARE
Ad

subra (1)ஆகஸ்ட் 18 – நாடு முழுமையிலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ம.இ.கா தேசியத் தலைவருக்கான தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்ற அறிவிப்பை கட்சியின் துணைத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் நாளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இருவரும் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று, கடந்த ஒரு மாத காலமாக ம.இ.கா தலைவர்களைச் சந்தித்துத் தங்களுக்கான ஆதரவைத் திரட்டி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை எந்தவித உறுதியான பதிலும் கூறாமல் இருந்து வரும் டாக்டர் சுப்ரமணியம் நாளை தனது உறுதியான, இறுதியான முடிவை அறிவிப்பார் என்றாலும், இதுவரையில் அவருக்கு நெருக்கமானவர்களுக்குக்கூட அவர் எந்த முடிவை எடுப்பார் என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை. அந்த அளவுக்கு தனது முடிவை ரகசியமாக டாக்டர் சுப்ரா வைத்திருக்கின்றார்.

#TamilSchoolmychoice

எனினும், தனது முடிவு எதுவாக இருந்தாலும் அதற்கான காரணங்கள் குறித்த முழுமையான விளக்கங்களையும் சுப்ரா நாளை தெரிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

போட்டியைத் தவிர்க்க சமாதானப் பேச்சு வார்த்தை

இதற்கிடையில் இறுதிக்கட்டமாக, கட்சியில் உள்ள சில மூத்த தலைவர்களும், சில தரப்பினரும் தேசியத் தலைவருக்கான தேர்தலில் போட்டியிருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருப்பதாகவும் ம.இ.கா வட்டாரங்கள் தெரிவித்தன.

இருப்பினும், நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமாதானப் பேச்சுவார்த்தையின் முடிவு இன்றிரவுக்குள் தெரிந்து விடும் என்றும் அந்த முடிவு எதுவாக இருந்தாலும், சுப்ராவின் அறிவிப்பு நாளை நிச்சயம் என அவருக்கு நெருக்கமான அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

சுப்ராவின் தாமதமான அறிவிப்பால் அவருக்கு சாதகமாக இருந்த அரசியல் சூழ்நிலையை அவர் சற்றே இழந்து விட்டார் என ம.இ.கா தேசியத் தலைவர் தேர்தலை அணுக்கமாக கண்காணித்து வரும் அரசியல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், இந்த தாமத அறிவிப்பு ஓர் அரசியல் வியூகம் என்றும், அதிகமான வேட்பு மனுப் பாரங்களை பெறுவதோ, சமர்ப்பிப்பதோ சுப்ராவின் நோக்கமல்ல என்றும் மாறாக அவருக்குத் தேவையான 300க்கும் மேற்பட்ட கிளைத் தலைவர்களின் ஆதரவை அவர் சுலபமாகப் பெற்றுவிட்டார் என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். எனவே, தேசியத் தலைவருக்கான போட்டியில் சுப்ரா குதிப்பது நிச்சயம் என்றும் அவர்கள் மேலும் கூறுகின்றனர்.

எது எப்படியிருந்தாலும், தேசியத் தலைவருக்கான தேர்தலில் போட்டி உண்டா இல்லையா என ம.இ.கா வினரிடையே கடந்த சில வாரங்களாக நிலவி வந்த சர்ச்சைகளும், விவாதங்களும் ஒரு வழியாக நாளை ஒரு முடிவுக்கு வந்து விடும்!