புதுடெல்லி, ஆக.19- அணு ஆராய்ச்சியாளரும், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவருமான ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் போர் விமானத்தை இயக்கும் விமானியாக வேண்டும் என்ற தனது இளமைக்கால கனவு பொய்த்துப் போனது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை தொழில் நுட்ப பயிலகத்தில் விண்வெளி பொறியியலை விருப்பப் பாடமாக பயின்ற அப்துல் கலாம், ‘கனவுகளை செயல்களாக்கிய எனது பயணம்’ என்ற தலைப்பில் புதிய நூல் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார்.
‘எனது இளமைக் காலத்தில் இருந்தே உயர உயரப் பறக்கும் போர் விமானங்களை இயக்கும் விமானியாக வேண்டும் என்ற நம்பிக்கையுடன், அதே கனவுலகில் நான் லயித்து வந்தேன்.
இதற்கான கல்வியை முடித்துவிட்டு டேராடூனில் உள்ள இந்திய விமானப் படையில் மனு செய்தேன். நேர்முக தேர்வுக்கான உத்தரவு பெறப்பட்ட 25 வேட்பாளர்களில் நானும் ஒருவனானதை எண்ணி மகிழ்ந்தேன்.
ஆனால், 8 பணியிடங்களுக்கான தேர்வில் நான் ஒன்பதாவது நபராக வந்ததால் விமானப்படை விமானியாக வேண்டும் என்ற எனது கனவு பொய்த்துப் போனது’ என்று அந்த நூலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.