புதுடெல்லி, ஆக. 15- பிரதமர் மன்மோகன்சிங் இன்று கூறும்போது, மும்பையில் சிந்துரக்ஷக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியாகியிருக்க கூடும் என அஞ்சப்படும் 18 கப்பற்படை ஊழியர்களுக்கு எனது ஆழ்ந்த வேதனையை தெரிவித்து கொள்கிறேன்.
நடப்பு பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் உணவு பாதுகாப்பு மசோதா விரைவில் நிறைவேறும் என நம்புகிறேன். வளமிக்க இந்தியா என்ற கனவை நிஜமாக்க பல நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து உள்ளோம்.
ஆனால் அதற்கான பயணம் நீண்ட ஒன்று. மேலும் நாம் அதற்காக தொடர்ந்து பயணம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். பாகிஸ்தானுடனான உறவை மேம்படுத்த, அவர்களது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதியில் இந்தியாவிற்கு எதிரான செயல்பாடுகளை மேற்கொள்ளாமல் இருப்பது அவசியம்.
எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தானியர்கள் மேற்கொண்ட தாக்குதல்கள் மீண்டும் தொடராமல் இருப்பதற்கான வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு எடுக்கும்.
தீவிரவாதம் மற்றும் நக்சலைட்டுகளின் வன்முறை கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. எனினும் தேசிய பாதுகாப்பு என்பது தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டியதாக உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் நாம் நீண்ட பயணத்தை மேற்கொண்டுள்ளோம்.
எனினும், மாற்றத்திற்காக நாம் தொடங்கிய பயணம் இன்னும் தொலைதூரத்திற்கு தொடர்ந்து செல்ல வேண்டிய நிலையில் உள்ளது என்று கூறியுள்ளார். மேலும், பொருளாதாரம் திரும்பவும் மந்த நிலையை அடையாமல் அதனை மீட்டெடுக்க அரசு கடுமையான வகையில் செயல்பட்டு வருகிறது.
பொருளாதார வளர்ச்சி மந்த நிலையில் இருந்து விரைவில் மாறும். நவீன, வளர்ந்து வரும் மற்றும் சமதர்ம நாட்டில், குறுகிய மற்றும் வகுப்புவாத எண்ணங்களுக்கு இடம் இல்லை. அவற்றை நாம் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டு பேசினார்.
புதிய திறமைகளை வெற்றிகரமாக செயல்படுத்துவோருக்கு ரூ.10 ஆயிரம் வழங்குவதற்கான புதிய திட்டம் மிக விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.