கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – கடந்த சனிக்கிழமை 12 வது உலகத்தமிழ் இணைய மாநாட்டில் நடைபெற்ற கருந்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட கல்வித்துறை துணையமைச்சர் கமலநாதன் வளர்ந்து வரும் புதிய தொழில் நுட்பம் குறித்து சிறப்புரையாற்றினார்.
கருத்தரங்கில் பேசிய கமலநாதனின் உரை பின்வருமாறு:-
“வளர்ந்து வரும் புதிய தொழில் நுட்பத்தை நான் மிகவும் வரவேற்கிறேன். இனி வரக்கூடிய காலங்களில் மாணவர்கள் புத்தக மூட்டைகளை சுமக்கத் தேவையில்லை. தங்கள் பாடங்கள் அனைத்தையும் கையடக்கக் கருவிகளில் பதிவேற்றம் செய்து கற்பது தான் நவீனம். அதற்கான முழு முயற்சியும் கல்வித்துறை செயல்படுத்தி வருகிறது”
“இந்த புதிய தொழில் நுட்பங்களை நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இது தான் எதிர்காலத்தில் நடக்கப்போகிறது. எனவே நாம் என்ன செய்ய வேண்டும் என்றால், புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளும் சூழ்நிலைக்கு நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்கு இது போன்ற கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள் தான் நமக்கு உதவும்”
“எனவே இந்த மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுவினர், மேலும் இது போன்ற மாநாடுகளை அந்தந்த மாநிலங்களில் நடைபெறுவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதற்கு கல்வி அமைச்சு உதவத் தயாராக உள்ளது. தமிழ் பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் இணையம் தொடர்பான அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்” இவ்வாறு கமலநாதன் தனது சிறப்புரையில் தெரிவித்துள்ளார்.
கமலநாதனின் முழு சிறப்புரையை கீழ்க்காணும் ஒளிநாடாவின் மூலம் காணலாம்