கோலாலம்பூர், ஆகஸ்ட் 23 – மங்கோலிய அழகி அல்தான்துன்யா ஷாரிபு மரணத்தில் தொடர்புடைய அந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளும் இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டது குறித்து மனித உரிமை அமைப்பான சுவாராம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது.
சுவாராம் இயக்குனர் சிந்தியா கேப்ரியல் இது குறித்து கூறுகையில், “அல்தான்துன்யா வழக்கில் இன்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு அதை மீண்டும் புதிதாக தொடங்கப்பட வேண்டிய சூழலை ஏற்படுத்தியுள்ளது. அந்த இரு காவல்துறை அதிகாரிகளும் கொலை செய்யவில்லை என்றால் பிறகு யார் தான் அவரைக் கொன்றது என்ற கேள்வி எழுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “சி4 ரக வெடிமருந்துகள் எப்படி கிடைத்தன? அது ஒன்றும் சாதாரண கடைகளில் வாங்கும் சாமான் அல்ல” என்று சிந்தியா கேள்வி எழுப்பியுள்ளார்.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று வெளியிடப்பட்டுள்ள தீர்ப்பு அல்தான்துன்யா மரணத்தில் தொடக்கத்தில் இருந்து புதிதாக விசாரணையைத் தொடங்க வழிவகுத்திருக்கிறது என்றும், ஸ்கார்ப்பின் நீர்மூழ்கிக் கப்பல் வாங்கப்பட்டதில் உள்ள ஊழல் விவகாரத்திற்கும் அல்தான்துன்யா மரணத்திற்கும் தொடர்பு இருக்கிறதா? என்ற கேள்வி எழுவதாகவும் சிந்தியா கூறியுள்ளார்.