சென்னை, ஆக. 26– தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
உணவுப் பாதுகாப்பு மசோதா நாடாளுமன்றத்தில் இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவிருக்கிறது. இந்த மசோதாவைப் பொறுத்தவரை தி.மு.க நிலைப்பாட்டை ஏற்கனவே நான் தெளிவுபடுத்தியிருக்கிறேன்.
தமிழகத்திற்கு இதுவரை செய்யப்பட்டு வரும் அரிசி ஒதுக்கீட்டில் எந்தவித மாறுதலும் செய்யக் கூடாது என்ற ஒரு திருத்தத்தை தி.மு.க. சார்பில் நாடாளுமன்றக் கழகக் குழு தலைவர், டி.ஆர். பாலு ஏற்கனவே 7.8.2013 அன்றே கொடுத்து, அந்தத் திருத்தம் மத்திய அரசினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு மொத்தமாக வழங்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள 36.78 லட்சம் டன் அரிசி ஒதுக்கீட்டில்; 21.88 லட்சம் டன் அரிசி கிலோ ஒன்றுக்கு 3 ரூபாய் வீதம் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. மீதம் உள்ள 14.90 லட்சம் டன் அரிசி என்ன விலையில் வழங்கப்படும் என்பதைப் பற்றி மத்திய அரசு நிர்ணயம் செய்யும் என்று திருத்தத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசே 14.90 லட்சம் டன் அரிசிக்கு விலை நிர்ணயம் செய்வது என்பதை திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்றுக் கொள்ளாது என்றும், அந்த அரிசியும் கிலோ ஒன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 8.30 ரூபாய் விலையிலேயே தொடர்ந்து வழங்கப்படும் என்பதை மத்திய அரசு தெளிவாக்க வேண்டுமென்றும்,
தி.மு.க. சார்பில் கடந்த 21.8.2013 அன்றே நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு, மத்திய உணவுத்துறை மந்திரி கே.வி. தாமசுக்கு கடிதம் மூலமாக உறுதியான வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.