கோலாலம்பூர், ஆகஸ்ட் 27 – ஹிண்ட்ராப் தலைவரும், துணையமைச்சருமான பி.வேதமூர்த்தியை பதவி விலகச் சொல்லி ஏற்கனவே இரு அமைச்சர்கள் கூறியிருந்த நிலையில், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரான கைரி ஜமாலுதீன் மூன்றாவதாக அதில் இணைந்துள்ளார்.
கடந்த வாரம் பினாங்கு மாநிலத்தில் 5 இந்திய இளைஞர்கள் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக வேதமூர்த்தி விடுத்த அறிக்கைக்கு எதிராக உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடியும், பாதுகாப்பு அமைச்சர் ஹிசாமுடினும் அறிக்கை விடுத்திருந்தனர்.
இது குறித்து கைரி இன்று சினார் ஹரியான் நாளிதழுக்கு அளித்த கருத்தில், “இது போன்ற அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களையும், முறையற்ற அறிக்கைகளையும் அவர் வெளியிட்டுக் கொண்டிருக்கலாம். ஆனால் அரசாங்கத்தில் அவர் இருக்கத் தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்.