Home கருத்தாய்வு “ஒருமைத்துவத்தில் மலர்ந்த சுதந்திரம்” – கே.எஸ்.செண்பகவள்ளி

“ஒருமைத்துவத்தில் மலர்ந்த சுதந்திரம்” – கே.எஸ்.செண்பகவள்ளி

1542
0
SHARE
Ad

1001106_682414701787588_667470070_aகோலாலம்பூர், ஆகஸ்ட் 31 – “என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?” என்று பாரத நாட்டின் சுதந்திரத் தாகத்தை தம் கவிதைகளின் மூலம் ஆழ்ந்து வெளிப்படுத்தினார் மகாகவி பாரதியார். அதே சுதந்திர வேட்கைக்காக மலேசிய நாட்டில் போராடிய தேசத் தியாகிகள் பலர். அவர்களில் முதன்மைப் பெற்று விளங்குபவர்தான் துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல் ஹாஜ்.

மலேசிய நாடு சுதந்திரம் அடைந்து இன்று 56 வருடங்களை எட்டிவிட்டது.இந்நாட்டை சீர்ப்படுத்த வந்த நாம் பட்ட சிரமங்கள் கொஞ்சமல்ல. ஜப்பானியர் அராஜகத்திலிருந்தும், பிரிட்டிஷார் கோராப்பிடியிலிருந்தும் பெரும்பாடுபட்டே நம் நாட்டைக் காப்பாற்றினர் நம் தேசத்தலைவர்கள். தேசத்தந்தை துங்கு அப்துல் ரஹ்மானின் பெருமுயற்சியாலும், மூவின மக்களின் பேராதரவாலும் 1957-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி மலேசியாவிற்குச் சுதந்திரம் கிடைத்தது.

1957ம் ஆண்டு மே மாதம் 9ம் தேதி, மலாயாவின் புதிய அரசியலமைப்புப் பற்றி பிரிட்டனுடன் இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காகக் கூட்டணி சார்பில் துங்கு அப்துல் ரஹ்மான், துன் அப்துல் ரசாக், துன் வீ.தி. சம்பந்தன், டத்தோ யோங் யோக் லின், முத்திரைக்காப்பாளர் துவான் ஹஜி முஸ்தாபா அல்பக்ரி ஆகியோருடன் மற்றும் சில முக்கியப் பிரமுகர்களும் லண்டனுக்குப் பயணமானார்கள்.

#TamilSchoolmychoice

அதற்கு முன்பாக இப்பயணத்தைக் குறித்து மலேசிய நாட்டின் தேசத்தலைவர்கள் தங்கள் கருத்தினைப் பகிர்ந்து கொண்டனர்.1157621_682413811787677_591456862_a

“இந்நாட்டின் எதிர்காலத்திற்குப் போராடி, சுபிட்சமுள்ள எதிர்காலத்தைத் தயார் செய்து மலாயா மக்களை விசுவாசமுள்ள பிரஜைகளாக்கும் பொறுப்பு எங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஆண்டவன் அருளாலும் உங்கள் ஆதரவாலும் நாங்கள் இதுவரை வெற்றி அடைந்து வந்துள்ளோம். ஆண்டவன் ஆசீர்வதித்து எங்களுக்கு வழிக்காட்டப் பிரார்த்திக்கிறோம். நீங்கள் என் மீது கொண்டுள்ள நம்பிக்கையைத் தவறாக உபயோகப்படுத்த மாட்டேன். மலாயா சந்தோசமான ஐக்கிய நாடாக விளங்கும் என்று நம்புகிறேன்” என்று துங்கு அப்துல் ரஹ்மான் மலாயா மக்களுக்கு உறுதி கூறினார்.

துன் வீ.தி. சம்பந்தன் கருத்துரைக்கையில், “நாங்கள் பிரார்த்தனை நிறைந்த இதயத்துடன் செல்கிறோம். மேலும் எங்கள் வழி முற்றிலும் நியாயமானது. என்றும் இந்நாட்டின் சிறந்த எதிர்கால நலனுக்குரியது என்ற முழு நம்பிக்கையுடன் செல்கிறோம். சுதந்திர மலாயாவில் எல்லா சமூகங்களின் எதிர்காலம் சுபிட்சமாக இருக்குமென்பது உறுதியாகும். நாட்டிலுள்ள பெரும்பான்மையோருடன் நானும் சேர்ந்து கொள்ளுகிறேன். எங்களைச் சந்தேகக் கண்கொண்டோ அல்லது நாங்கள் என்ன கொண்டு வருவோம் என்று சந்தேகப்பட்டோ பார்க்க வேண்டாமென நான் கூற விரும்புகிறேன்” என்று முழு நம்பிக்கையுடன் தம் பயணத்தை மேற்கொண்டார்.

1236014_682414918454233_818557555_aமக்கள் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும் என்றும், இருக்கின்ற ஒரு சில பிரச்சனைகளையும் லண்டனில் சுமூகமாக பேசி தீர்த்து விடுவோம், என்று தெரிவித்தார் துன் அப்துல் ரசாக்.

“இதுவரை முடிவு காணப்படாத பிரச்சனைகளில் எங்கள் கருத்து தெளிவாக உள்ளது. அபிப்பிராய பேதமுள்ள விசயங்கள், காமன்வெல்த் விஸ்தரிப்பது, இவைகள் லண்டன் பேச்சு வார்த்தை நிகழ்ச்சி நிரலில் முக்கிய இடம் பெறும்” என்று முத்திரைக் காப்பாளரான துவான் ஹஜ்ஜி அல்பக்கிரி நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தப் பயணம் வெற்றி பெற்று 1957ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி நாட்டிற்குச் சுதந்திரமும் கிடைத்தது!

– இக்கட்டுரையை எழுதியவர் எழுத்தாளர்/ ஆய்வாளர் கே.எஸ். செண்பகவள்ளி