Home கலை உலகம் “தண்டா புத்ரா” திரை விமர்சனம் – 7 ஆண்டுகால சரித்திர சம்பவங்களின் தொகுப்பு!

“தண்டா புத்ரா” திரை விமர்சனம் – 7 ஆண்டுகால சரித்திர சம்பவங்களின் தொகுப்பு!

806
0
SHARE
Ad

06ஆகஸ்ட் 31 – 13வது பொதுத் தேர்தலுக்கு முன்பாகவே வெளியிடத் திட்டமிடப்பட்டு, அப்போது தோன்றிய எதிர்ப்புகளினால் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்ட படம் தண்டா புத்ரா’. தற்போது பினாங்கில் தடை, பின்னர் அனுமதி என மேலும் சில சர்ச்சைகளையும்  ஏற்படுத்தியுள்ள “தண்டா புத்ரா” மலாய்ப்படம் எதிர்பார்த்த அளவுக்கு, கண்டனத்துக்குரிய காட்சிகளைக் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிட்டத்தக்கது.

#TamilSchoolmychoice

படம் முழுக்க அரசாங்கத்தின் கோணத்தில், அன்றைய பிரதமர்கள் துங்கு அப்துல் ரஹ்மான், துன் அப்துல் ரசாக் மற்றும் துணைப் பிரதமர்கள் துன் டாக்டர் இஸ்மாயில், துன் ஹூசேன் ஓன் ஆகியோர் நாட்டில் அன்றைக்கு நிகழ்ந்த இனக் கலவரங்களையும், நாட்டின் சில முக்கிய பிரச்சனைகளையும் எவ்வாறு கையாண்டார்கள் என்பதை எடுத்துக் காட்டுவதுதான் இந்தப் படம்.

இடையிடையே துன் ரசாக், துன் இஸ்மாயில் இருவருக்கும் இருந்த நெருக்கத்தையும், நட்பையும், அவர்களின் குடும்பங்களுக்கிடையில் இருந்த உறவையும் இந்தப் படம் சித்தரிக்கின்றது.

படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகள் என்றால், படத்தின் தொடக்கத்தில் வரும் 1969 மே 13, இனக்கலவரங்கள் ஜசெக, கெராக்கான் போன்ற அன்றைய எதிர்க்கட்சி ஆதரவாளர்களினால் ஏற்பட்டது என்பது போன்ற தோற்றத்தை இப்படம் ஏற்படுத்துவதுதான்.

இந்த இனக் கலவரங்களை கம்யூனிஸ்ட்டுகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதையும், இந்த கலவரங்களில் ஊடுருவினார்கள் என்பதையும் காட்சிகள் மூலமும், வசனங்கள் மூலமும் உணர்த்தியிருக்கின்றார்கள்.

கம்யூனிஸ்ட்டுகள் என்னும்போது அவர்கள் சீனர்களாகக் காட்டப்படுவதும் ஒரு சர்ச்சைக்குரிய விஷயம்தான். முக்கிய காவல் துறை அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டதும், நாட்டின் தேசிய சின்னம் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்பட்டதும் சீன கம்யூனிஸ்ட்டுகளால்தான் எனக் காட்டப்படுவதும் மற்றொரு சர்ச்சையாக உருவெடுக்கக்கூடும்.

இருப்பினும் படம் முழுக்க முழுக்க, உண்மையில் நடந்த சரித்திர சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கின்றது என்பது ஓரளவுக்கு நாட்டின் சரித்திரம் தெரிந்தவர்களுக்கு படத்தைப் பார்க்கும் போது புரியும்.

படத்தின் திரைக்கதை

DSC_7240படத்தின் ஆரம்பம், மே 13ஆம் தேதி 1969ஆம் ஆண்டில் நிகழ்ந்த இனக்கலவரங்களிலிருந்து ஆரம்பிக்கின்றது. ஜசெகவின் ராக்கெட் சின்னம் தாங்கிய அரசியல் ஆதரவாளர்கள்கள்தான் கலவரத்தை உருவாக்கினார்கள் என்பது போன்ற தோற்றத்தை படம் ஏற்படுத்துகின்றது என்பதை மறுக்க முடியாது.

அதே சமயம் மலாய்க்காரர்களும், மக்களையும், கார்களையும் தாக்குவது போன்ற காரியங்களில் ஈடுபட்டார்கள் என்பதையும், ஒரு சீன சினிமா திரையரங்கில் நுழைந்து அங்கு படம் பார்த்துக் கொண்டிருந்தவர்களை கத்தியால் குத்தினார்கள் என்பது போன்ற காட்சிகளும் படத்தில் இடம் பெறுகின்றன.

மறந்து போன, மறக்கப்பட வேண்டிய சம்பவங்களை மீண்டும் திரைப்படமாக்கி, இனத் துவேஷத்தையும், இனப் போராட்டத்தையும் மீண்டும் மலேசிய மக்களின் மனங்களில் நஞ்சாக விதைக்க வேண்டுமா என்பதுதான் இந்தக் காட்சிகளைப் பார்க்கும் போது உடனடியாக நமக்கு எழும் கேள்வி!

இருந்தாலும் அந்த சம்பவங்களையே காட்டிக் கொண்டிருக்காமல், அதனைத் தொடர்ந்து, நிலைமையைச் சமாளிக்க அன்றைய துணைப் பிரதமர் துன் அப்துல் ரசாக்கும், அமைச்சரவையில் வந்து சேரும் துன் டாக்டர் இஸ்மாயிலும் நடத்தும் பேச்சு வார்த்தைகள் படத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்கின்றன.

தொடர்ந்து, துங்குவின் ராஜினாமா, மகாதீர் அன்று துங்குவிற்கு எதிராக எழுதிய பகிரங்க கடிதம், அதனால் மகாதீர் அம்னோவிலிருந்து விலக்கப்படுவது போன்ற ஏராளமான சரித்திர சம்பவங்கள் சிறு சிறு காட்சிகளாக காட்டப்படுகின்றன.

படத்தில் அதிகமான வசனங்கள் வைக்காமல், காட்சிகளின் வடிவில் படத்தை நகர்த்துவதில் இயக்குநர் டத்தோ சுகைமி பாபாவின் திறமையைக் காண முடிகின்றது.

இடையிடையே நாட்டில் நடந்த சில அசம்பாவிதங்கள் காட்டப்பட்டுக் கொண்டே இருக்க, அதனை துன் ரசாக்கும் துன் இஸ்மாயிலும் எவ்வாறு திறமையோடு கையாளுகின்றார்கள் என்பது காட்டப்படுகின்றது.

ஒரு கட்டத்தில் அரசியல் ரீதியாக ரசாக், இஸ்மாயில் இருவரும் நெருக்கமாகிவிட, நோய்வாய்ப்படும் துன் இஸ்மாயில் தனது உடல் நிலையைப் பற்றி துன் ரசாக்கிடம் கூறவரும்போது, துன் ரசாக் பதிலுக்கு தனது உடல் நிலையைப் பற்றி முந்திக் கொண்டு கூற, துன் இஸ்மாயில் தனது உடல் உபாதையைப் பற்றி சொல்லாமலே மனம் மாறி திரும்பிச் செல்வது படத்தின் நெகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று.

துன் ரசாக், துணைப் பிரதமரான துன் இஸ்மாயில் மீது நம்பிக்கை வைத்தும், தனது சுகாதாரக் குறைவு காரணமாகவும், பொறுப்புக்களை அவர்மீது சுமத்த, இடையிலேயே துன் இஸ்மாயில் மாரடைப்பால் காலமாகின்றார்.

அதன் பின்னர், துன் ஹூசேன் ஓன் துணைப் பிரதமராக பதவியேற்கின்றார். அம்னோவிலிருந்து விலக்கப்பட்ட மகாதீரும் துன் ரசாக்குடன் பின்னர் இணைந்து கொள்வதாக ஒரு காட்சி காட்டப்படுகின்றது.

படத்தின் இறுதிக் காட்சிகள், துன் ரசாக் நோய்வாய்ப்பட்டிருந்ததையும், அதனால் அவரது குடும்பத்தினர் சந்திக்கும் சோகங்களையும், இலண்டனில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் துன் ரசாக் தனது லுக்குமியா புற்று நோய்க்காக சிகிச்சை பெற்றதையும் விரிவாக காட்டுகின்றன.

படத்தின் ஆரம்பம் முதல் ஒரு மலாய்க் குடும்பமும், ஒரு சீனக் குடும்பமும் இணைந்து பழகும் காட்சிகளும், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல்கலைக் கழகத்தில் படிக்கும் போது நிகழ்ந்த சில சம்பவங்களும் காட்டப்படுகின்றன. இனக் கலவரத்தின் போது, சீனக் குடும்பத்தை மலாய்க் குடும்பம் காப்பாற்றுவது போன்ற இன ஒற்றுமைக் காட்சிகளும் படத்தில் இடம் பெற்றிருப்பது சிறப்பு.

துன் ரசாக்கின் மனித நேயம்

1292940_682706748424875_2005960128_o1969ஆம் ஆண்டில் தொடங்கும் படம் 1976ஆம் ஆண்டு துன் ரசாக் மரணமடைவதோடு முடிவடைகின்றது. இடையிடையே அரசாங்க தகவல் இலாகா மற்றும் ஆவணக் காப்பகத்தின் உண்மையான காட்சிகள் காட்டப்படுகின்றன.

துன் ரசாக்கின் அலுவலகத்தில் வேலை செய்யும் அவரது ஊழியர்கள் தொடர்பான சில காட்சிகளும் காட்டப்படுகின்றன.

பெல்டா நிலக் குடியேற்றத்தில் பாழடைந்த நிலையில் இருக்கும் ஒரு பள்ளிக்கு உடனடியாக நிதி ஒதுக்கி அந்த பள்ளியை சீரமைக்கச் சொல்கின்றார், துன் ரசாக். அதே பள்ளியில் தற்காலிக ஆசிரியராக இருப்பவரை தனது அலுவலகப் பணியாளராக நியமிக்கின்றார். இலண்டனில் மருத்துவ சிகிச்சை பெற்றுவரும் தனது இறுதிக்கட்ட நாட்களில் கூட தனது அலுவலகப் பணியாளர்களை மறக்காமல் ஒவ்வொருவருக்கும் ஒரு பரிசுப் பொருளை வாங்கி அனுப்புகின்றார் துன் ரசாக். அந்த பரிசுப் பொருட்கள், அவரது மரணத்திற்குப் பின்னால் வந்து சேருவதும், அவரது மனித நேயத்தை நினைத்து அவரது அலுவலக பணியாட்கள் உருகுவதும் நெகிழ்வான காட்சிகள்.

துன் ரசாக் நோய்வாய்ப்பட்டிருந்த காலத்தில் அவரது மனைவி, அவரது மகன்கள் (இன்றைய பிரதமர் நஜிப் துன் ரசாக் உட்பட) சந்தித்த இக்கட்டான நிலைமைகளும் படத்தில் விரிவாகக் காட்டப்பட்டுள்ளன. தனது உடல்நிலையைப் பற்றித் தெரிவிக்காமல் தனது நெருங்கிய குடும்ப உறவினர்களிடம் கூட துன் ரசாக் மறைத்து வைத்திருந்தார் என்பதும்  படத்தில் காட்டப்படும் மற்றொரு சரித்திர உண்மை.

படத்தின் சிறப்பும், குறைகளும்

1969ஆம் ஆண்டு முதல் 1976ஆம் ஆண்டு வரையிலான பல வரலாற்று சம்பவங்களை சுருக்கமாகவும், பரபரப்பாகவும் காட்டியிருப்பது நன்றுதான். இருந்தாலும், நீண்ட கால வரலாற்றையும் எல்லா முக்கிய சம்பவங்களையும் படத்தின் குறுகிய நேரத்திற்குள் அடக்குவதற்கு இயக்குநர் முயன்றிருப்பது படத்தை ஓர் ஆவணப் படம் போல் மாற்றிக் காட்டுகின்றது.

இல்லாவிட்டால், சில முக்கிய சம்பவங்களை மட்டும் ஆழமாக விவரித்திருந்தால்  படம் இன்னும் மெருகூட்டப்பட்டிருக்கும்.

இருப்பினும், படம் இறுதிவரை விறுவிறுப்பாகவும், ஓர் அழகியலோடும் படமாக்கப்பட்டிருப்பது இயக்குநரின் திறமையை எடுத்துக்காட்டுகின்றது.

7n_feldascreenstanda01படத்தின் நடிகர், நடிகைகளும் தங்களின் பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கின்றனர். குறிப்பாக, துன் ரசாக் பாத்திரத்தில் நடித்திருக்கும் ருஸ்டி ரம்லி சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கின்றார். துன் ரசாக்கின் உணர்வுகளை முடிந்தவரை இயல்பாக காட்ட முயன்றிருக்கின்றார். தனது இறுதி நாட்கள் எண்ணப்படுகின்றன என்பது தெரிந்தும் இயல்பான வாழ்க்கையை நடத்த முயன்ற துன் ரசாக்கை நம் கண் முன் நிறுத்துகின்றார்.

இதுவரை, மே 13 மற்றும் 1969க்கும் 1976க்கும் இடையிலான வரலாற்று சம்பவங்களை எழுத்திலும், அரசியல்வாதிகளின் பேச்சிலும் மட்டும் கேட்டு வந்த நமக்கு திரைப்படத்தின் வாயிலாக பார்க்கக்கூடிய வாய்ப்பை தண்டா புத்ரா ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது.

சரித்திரத்தில் ஆர்வமுள்ளவர்கள், கடந்த கால அரசியல் நடப்புகளைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் கண்டிப்பாக பார்த்து ரசிக்க வேண்டிய படம், சுதந்திர தின வெளியீடாக திரையீடு கண்டிருக்கும் தண்டா புத்ரா’.

-இரா.முத்தரசன்