புதுடெல்லி, செப் 2- சோனியா காந்தி கொண்டுவர விரும்பிய உணவு மசோதா பாராளுமன்றத்தில் ஒப்புதலை பெற இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் அவர் நோய்வாய்ப்பட்டார்.
இதனால், கடந்த மாதம் 26-ம் தேதி அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 5 மணி நேர சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து அவர் வெளியேறினார்.
இந்நிலையில் சோனியா காந்தி, மருத்துவ சிகிச்சைக்காக இன்று அமெரிக்க செல்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இருந்தும் சோனியா காந்தி என்ன நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று விவரம் கூற அவர் மறுத்துவிட்டார்.
கடந்த 2011-ம் ஆண்டு நோய்வாய்ப்பட்ட அவர் அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதனையடுத்து 2012 ஆண்டு பிப்ரவரி மற்றும் செப்டம்பர் மாதங்களில் மருத்துவ பரிசோதனைக்காக சோனியா அமெரிக்கா சென்று வந்தார். இருந்தும் என்ன நோயால் அவர் அவதியுறுகிறார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.