Home கருத்தாய்வு ஜி.பழனிவேல்: பத்திரிக்கை நிருபர் முதல் தேசியத் தலைவர் பதவி வரை!

ஜி.பழனிவேல்: பத்திரிக்கை நிருபர் முதல் தேசியத் தலைவர் பதவி வரை!

834
0
SHARE
Ad

Palanivel-new-Featureசெப்டம்பர் 2 – நேற்று செப்டம்பர் 1ஆம் நாள், மதியம் 12.30 மணியளவில், ம.இ.கா. தேசியத் தலைவர் தேர்தல் குழுவின் தலைவர் டான்ஸ்ரீ க.குமரன், அடுத்த மூன்றாண்டுகளுக்கு டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், கட்சியின் தேசியத் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என அறிவித்த வேளையில், அங்கு குழுமியிருந்த பல மூத்த ம.இ.கா. தலைவர்களுக்கு நினைவுகள் நிச்சயம் ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு பின்னோக்கிப் போயிருக்கும்.

#TamilSchoolmychoice

1980ஆம் ஆண்டுகளில் பெர்னாமா எனப்படும் தேசிய செய்தி நிறுவனத்தின் நிருபர்களில் ஒருவராக ஒடிசலான தேகத்துடன், உயரமாக, சிவந்த தோற்றத்துடன் ம.இ.கா. கூட்டங்களில் செய்திகள் சேகரிப்பதற்கு பழனிவேல் என்ற பத்திரிக்கை நிருபர் வலம் வந்ததை அந்த மூத்த ம.இ.கா. தலைவர்கள் நிச்சயம் நேற்று நினைத்துப் பார்த்திருப்பார்கள்.

பத்திரிக்கையாளர் என்ற முறையிலும், செய்தி சேகரிப்பாளர் என்ற முறையிலும் பழனிவேல் கோவிந்தசாமி என்ற முழுப்பெயர் கொண்ட அவர் சில ம.இ.கா. தலைவர்களோடு பழக்கத்தையும் நெருக்கத்தையும் உருவாக்கி வைத்திருந்தார்.

அத்தகைய தலைவர்களின் மிகவும் முக்கியமானவர் அப்போது புதிதாக ம.இ.கா தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ச.சாமிவேலு.

T03805காலப்போக்கில் பழனிவேல் ம.இ.கா. தேசியத் தலைவரான ச.சாமிவேலுவோடு அணுக்கமாக இருக்கின்றார் என்றும் தகவல் ஊடகங்கள் தொடர்பான வியூகங்களிலும், அணுகுமுறைகளிலும்,  அவர்தான் சாமிவேலுவுக்கு ஆலோசனை கூறுகின்றார் என்றும் ம.இ.கா வட்டாரங்களில் தகவல்கள் பரவத் தொடங்கின. அதன் மூலம் சாமிவேலுவுக்கு நெருக்கமான ஒருவராக பழனிவேல் உருவாகி வருகின்றார் என்றும் ம.இ.கா வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்தன.

தகவல் ஊடகங்கள் தொடர்பான விவகாரங்களில் வியூங்கள் வகுப்பதற்கும், சில பத்திரிக்கை அறிக்கைகளைத் தயார் செய்வதற்கும் பழனிவேல் சாமிவேலுவுக்கு உறுதுணையாக இருக்கின்றார் என்றும் ம.இ.கா. வட்டாரங்களில் அப்போது பேசப்பட்டன.

அப்போதெல்லாம், சாமிவேலுவுக்கும் பழனிவேலுவுக்கும் இடையிலான நெருக்கத்தையும், பழக்கத்தையும் யாரும் பெரிதாக பொருட்படுத்தவில்லை.

பல பத்திரிக்கையாளர்கள் இவ்வாறு அரசியல் தலைவர்களுடன் நெருக்கமாக இருப்பது மலேசிய அரசியலில் வழக்கமான ஒன்றுதான் என்றுதான் பலரும் நினைத்தார்கள்.

ஆனால், இன்றைக்கு திரும்பிப் பார்க்கும்போது, சாமிவேலுவுடனான அந்த பழக்கமும், நெருக்கமும், காலப் போக்கில் பத்திரிக்கையாளரான பழனிவேலுவை ஓர் அமைச்சராக, ம.இ.கா என்ற இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் பெரியதொரு கட்சியின் தேசியத் தலைவராக இன்றைக்கு உருவாக்கி வைத்திருக்கின்றது என்றால், அதனை விதிப் பயன் என்றும் கூறலாம்,  அல்லது அந்த வளர்ச்சியை பழனிவேலின் அரசியல் தூரநோக்குச் சிந்தனையாகவும், அவருக்கே உரிய அரசியல் வியூக ஞானத்தை அவர் ம.இ.காவில் செயல்படுத்திய விதத்தினாலும் நிகழ்ந்த ஒன்று என்றும் கூறலாம்.

பத்திரிக்கைச் செயலாளராக நியமனம்….Palanivel

சாமிவேலுவுக்கும், பழனிவேலுவுக்கும் நெருக்கமான பழக்கம் உருவாகி வந்த காலகட்டத்தில்தான், சாமிவேலுவின் பத்திரிக்கைச் செயலாளராக இருந்த பரம் என்பவர் அகால மரணமடைந்தார்.

பரம் அவர்களின் மரணத்திற்குப் பின்னர் காலியான அமைச்சரின் பத்திரிக்கைச் செயலாளர்  பதவிக்கு சாமிவேலு பழனிவேலுவை 1986ஆம் ஆண்டில் நியமித்தார்.

அப்போதுகூட பழனிவேலுவின் இந்த நியமனத்தை யாரும் பெரிதாக பொருட்படுத்தவில்லை. தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவின் பத்திரிக்கையாளர் ஒருவரே அமைச்சர் சாமிவேலுவின் பத்திரிக்கைச் செயலாளராக நியமிக்கப்பட்டது பொருத்தமான ஒன்று என்றுதான் பலரும் கருதினார்களே தவிர, இதனை ஓர் அரசியல் பிரவேசமாக அந்த கால கட்டத்தில் யாரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை.

ஆனால், 1990ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் உலு சிலாங்கூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக பழனிவேல் போட்டியிடுவார் என சாமிவேலு அறிவித்ததைத்தொடர்ந்து, யாரும் எதிர்பாராத வண்ணம் பழனிவேலுவின் அரசியல் பிரவேசமும் நிகழ்ந்தது என்பதோடு, ம.இ.காவில் அரசியல் சூழ்நிலைகளும் மாறத் தொடங்கின.

1990ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் வண்ணம் மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் ஒருநாள் லெபோ அம்பாங்கில் உள்ள இலட்சுமி விலாஸ் உணவகத்தில் உணவருந்த பழனிவேலுவை அழைத்துச் சென்ற சாமிவேலு அப்போதுதான் பழனிவேலுவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப் போவதாக கூறியதாக பின்னாளில் ஒரு பேட்டியில் பழனிவேல் கூறியிருந்தார்.

Palanivelகட்சியில் வளர்ச்சி

ஆனால், ஏதோ ஒரு விதத்தில் சாமிவேலுவை பழனிவேல் மிகவும் கவர்ந்திருந்தார் என்பது காலப்போக்கில் ம.இ.காவினருக்கும் மெல்ல மெல்ல புரியத் தொடங்கியது.

1990ஆம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பழனிவேல் பின்னர் நாடாளுமன்ற செயலாளராகவும், துணையமைச்சராகவும் அரசாங்கப் பதவிகளில் சாமிவேலுவால் நியமிக்கப்பட்டார்.

அதே வேளையில் கட்சியில் தேசியப் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டார். பின்னர் கட்சித் தேர்தல்களின்வழி தேசிய உதவித் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சிப் பதவிகளின் வழியாக ம.இ.கா கிளைத் தலைவர்களிடையே, குறிப்பாக சாமிவேலுவின் ஆதரவாளர்களிடையே தனது நெருக்கத்தை பழனிவேல் வளர்த்துக் கொண்டார்.

ம.இ.கா.வின் அரசியல் நிலைமைகளையும், சாமிவேலுவின் அரசியல் குணாதிசயங்களையும் மிகவும் தெளிவாகப் புரிந்துகொண்டு ம.இ.கா. அரசியல் சதுரங்க அரங்கில் தனது காய்களை கவனமுடன் நகர்த்தியவர் பழனிவேல்.

அவர் கட்சியில்  வளர்ந்து கொண்டிருந்த அதே காலகட்டத்தில் சாமிவேலுவுக்கு நெருக்கமான அடுத்த கட்ட தலைவர்களாகத் திகழ்ந்த டத்தோ வி.கோவிந்தராஜ், டான்ஸ்ரீ மகாலிங்கம், டி.பி.விஜேந்திரன், டத்தோ முத்து பழனியப்பன், பூச்சோங் டத்தோ எஸ்.எஸ்.சுப்ரமணியம் போன்றோர் ஒருவர் பின் ஒருவராக, பல்வேறு காரணங்களுக்காக  சாமிவேலுவின்  நெருக்கத்திலிருந்தும், கட்சியிலிருந்தும் விலகியது பழனிவேல் கட்சியில் தனது பிடியை மேலும் இறுக்கமாக்கிக் கொள்ள அவருக்கு உதவியது.

சுப்ராவைத் தோற்கடித்து, துணைத் தலைவராக….subra-and-palani

தனது நீண்ட கால அரசியல் எதிரியான, கட்சியின் தேசியத் துணைத் தலைவரான டத்தோ (டான்ஸ்ரீ) சுப்ரமணியத்தை தோற்கடிக்க தருணம் பார்த்துக் கொண்டிருந்த சாமிவேலுவிற்கு 2006ஆம் ஆண்டில் அந்த தருணமும், சூழ்நிலையும் சரியாக வாய்த்தது.

2004ஆம் ஆண்டில் டத்தோ சுப்ரமணியத்திற்கு நாடாளுமன்றத்திற்கு மீண்டும் போட்டியிட, சாமிவேலு வாய்ப்பு வழங்கவில்லை. எனவே, கட்சியில் அவர், அரசாங்கப் பதவிகள் எதுவும் இல்லாத நிலையில்  போதிய பலமில்லாமல் இருந்த ஒரு கால கட்டத்தில், அப்போதைக்கு துணையமைச்சராக இருந்த பழனிவேல் அவரை எதிர்த்து 2006ஆம் ஆண்டு கட்சித் தேர்தலில் போட்டியிட்டார்.

சாமிவேலுவின் தளபதியாக சுப்ராவைத் தோற்கடிக்க களம் இறக்கப்பட்ட பழனிவேல் அந்த முயற்சியிலும் வெற்றி பெற்றார். சாமிவேலுவே, எல்லாப் பேராளர்களையும் நேரடியாகச் சந்தித்து, தன்னால் சுப்ராவோடு இனியும் ஒத்துழைக்க முடியாது எனவே அவரை துணைத் தலைவர் பதவியிலிருந்து தோற்கடிக்க வேண்டும், அவருக்கு பதிலாக பழனிவேல் வரவேண்டும் என செய்த பிரச்சாரம் பழனிவேலுவின் வெற்றிக்குப் பெருமளவில் துணை புரிந்தது.

கட்சியின் துணைத் தலைவராக பழனிவேல் 400க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் 2006ஆம் ஆண்டில் மாபெரும் வெற்றி பெற்றார்.

2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இறங்கு முகம்…

ஆனால், 2008ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தல் ம.இ.கா. அரசியல் அடித்தளத்தையே ஆட்டங்காணச் செய்தது.

சுங்கை சிப்புட்டில் சாமிவேலு தோல்விகாண, அவருக்கு பதிலாக பழனிவேல் வெற்றிபெற்று அமைச்சராக நியமனம் பெறுவார் என பலர் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் யாரும் எதிர்பாராத விதமாக, மிகவும் பாதுகாப்பானது எனக் கருதப்பட்ட உலுசிலாங்கூர் தொகுதியில் பழனிவேல் 198 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டார்.

சாமிவேலு, பழனிவேலு என கட்சியின் தேசியத் தலைவர், தேசியத் துணைத் தலைவர் ஆகிய இருவரின் தோல்விகளும் ஒரே நேரத்தில் நிகழ, யாரும் கனவிலும் எதிர்பார்த்திருக்க முடியாத மூன்றாவது தலைவர் ஒருவரை காலம், ம.இ.காவில் அமைச்சராக மக்களின் முன் நிறுத்தியது.

அவர்தான் இன்றைய துணைத் தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம். செகாமட் தொகுதியில் வெற்றி பெற்றிருந்த அவர் சாமிவேலுவுக்கு பதிலாக அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

Palanivelமீண்டும் 2009இல் துணைத் தலைவருக்கான போட்டி….

மீண்டும் 2009ஆம் ஆண்டில் நடந்த கட்சித் தேர்தலில், இழந்த தனது துணைத் தலைவர் பதவியை மீண்டும் வெற்றி கொள்ள சுப்ரா மறுபடியும் களமிறங்கினார்.

ஆனால், இந்த முறையும் பழனிவேல், குறுகிய வாக்கு வித்தியாசத்தில் – 82 வாக்குகளில் – வெற்றி பெற்றார். டத்தோ சோதிநாதன் மூன்றாவது போட்டியாளராக கோதாவில் குதித்தது பழனிவேலுவுக்கு எதிரான வாக்குகளைப் பிரித்தது. அதனால் தேர்தலின் முடிவும்,  பழனிவேலுவுக்கு சாதகமாகவே முடிந்தது.

இதற்கிடையில், உலுசிலாங்கூர் தொகுதியின் பக்காத்தான் ராயாட் நாடாளுமன்ற உறுப்பினர் 2010ஆம் ஆண்டில் திடீரென்று காலமாகிவிட, மீண்டும் பழனிவேல் அந்த தொகுதியில் இடைத் தேர்தலில் போட்டியிடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. சாமிவேலுவும் முதலில் அவ்வாறே அறிவித்து விட,  பழனிவேலுவும் தனது முதல் கட்ட பிரச்சாரங்களை உலுசிலாங்கூரில் முடுக்கிவிட்டார்.

ஆனால், அம்னோவின் தலையீட்டால், ம.இ.கா. வேட்பாளராக இளைஞரான பி.கமலநாதன் ஏப்ரல் 2010இல் நடைபெற்ற உலு சிலாங்கூர் இடைத் தேர்தலில் களமிறக்கப்பட்டு வெற்றியும் பெற்றார்.

உலுசிலாங்கூர் இடைத் தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டதன் விளைவாக பழனிவேல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக (செனட்டராக) நியமிக்கப்பட்டார். தொடர்ந்து அரசாங்கத்தில் துணையமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.

முழு அமைச்சராக நியமனம்…

2008 பொதுத் தேர்தலைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், அம்னோவில் ஏற்பட்ட தலைமைத்துவ மாற்றங்கள் தொடர்ந்து, சாமிவேலுவின் பதவி விலகலுக்கும் வித்திட்டன.

2010ஆம் ஆண்டு டிசம்பரில் சாமிவேலு பதவி விலக, இடைக்கால தேசியத் தலைவராக பழனிவேல் பொறுப்பேற்றார்.

2011ஆம் ஆண்டு நடைபெற்ற ம.இ.கா பொதுத் பேரவையில் பழனிவேலுவை அமைச்சராக நியமிப்பதாக பிரதமர் நஜிப் யாரும் எதிர்பாராதவண்ணம் ஓர் அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டு, பழனிவேலுவின் அடுத்தகட்ட அரசியல் வளர்ச்சியைத் தொடக்கி வைத்தார்.

அந்த அறிவிப்போடு, இரண்டு அமைச்சர்கள் வேண்டும் என நீண்ட காலமாக ம.இ.கா நடத்தி வந்த அரசியல் போராட்டத்திற்கும் ஒரு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.

தொடர்ந்து, இந்த ஆண்டு நடைபெற்ற நாட்டின் 13வது பொதுத் தேர்தலிலும் கேமரன் மலைத் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக பழனிவேல் வெற்றி பெற்றார்.

இவ்வாண்டுக்கான கட்சித் தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் தேசியத் தலைவர் பதவிக்கு டாக்டர் சுப்ரமணியம் போட்டியிடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. சுப்ரமணியமும் நாடு தழுவிய நிலையில் பயணம் செய்து கிளைத் தலைவர்களைச் சந்தித்து பிரச்சாரம் செய்தது கட்சியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், தனது மற்றொரு அரசியல் சாதுரியமாக, இன்னும் ஒரு தவணைதான் பதவியில் இருப்பேன் என பழனிவேல் விடுத்த அறிவிப்பு, கட்சியின் எல்லா நிலைகளிலும் கிளைத் தலைவர்களிடையே சாதகமான அனுகூலத்தை அவருக்கு ஏற்படுத்த, சுப்ராவும் போட்டியிலிருந்து பின்வாங்க நேர்ந்தது.

IMG_9238ஆனால், நேற்று கட்சியின் எட்டாவது தேசியத் தலைவராக அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், ஏராளமான கிளைத் தலைவர்களின் ஏகோபித்த ஆதரவு காரணமாக, அவர்கள் விரும்பினால், 2016ஆம் ஆண்டுக்குப் பின்னரும் தான் தேசியத் தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்கக்கூடும் என்ற மற்றொரு எதிர்பாராத அறிவிப்பையும் பழனிவேல் செய்துள்ளார்.

எதிர்காலம் எப்படி இருப்பினும்,

இன்றைய நிலையில் பார்க்கும்போது, ஒரு சாதாரண பத்திரிக்கையாளர் நிலையிலிருந்து, தனது பலத்தையும், பலவீனங்களையும் நன்கு உணர்ந்து கொண்டு, அவற்றை தகுந்த விதத்தில் சமன் செய்து கொண்டு, தனக்கென வாய்ப்புக்களை அரசியலில் உருவாக்கிக் கொண்டு, அதே வேளையில் கிடைத்த வாய்ப்புக்களை வியூகத்துடனும், சாதுரியத்துடனும் நன்கு பயன்படுத்திக் கொண்டு, தனது திறமைகளால், இன்றைக்கு ம.இ.காவின் எட்டாவது தேசியத் தலைவராக, முழு அமைச்சராக, பல்வேறு போராட்டங்களுக்கிடையில் வளர்ந்து உயர்ந்துள்ள பழனிவேல் நிகழ்த்தியது ஓர் அரசியல் சாதனைதான் என்பதை நடுநிலை அரசியல் நோக்கர்கள் யாரும் ஒப்புக் கொள்ளவே செய்வார்கள்!

-இரா.முத்தரசன்