Home அரசியல் கிளைத்தலைவர்கள், உறுப்பினர்கள் விரும்பினால் பழனிவேல் தொடர்ந்து பதவியில் நீடிக்கலாம் – வேள்பாரி கருத்து

கிளைத்தலைவர்கள், உறுப்பினர்கள் விரும்பினால் பழனிவேல் தொடர்ந்து பதவியில் நீடிக்கலாம் – வேள்பாரி கருத்து

584
0
SHARE
Ad

Vell-Paariகோலாலம்பூர்,செப்டம்பர் 3 – கிளைத் தலைவர்கள், உறுப்பினர்கள் ஆகியோரின் ஆதரவை தொடர்ந்து பெறும் பட்சத்தில், டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் வரும் 2016 ஆம் ஆண்டிற்குப் பிறகும் ம.இ.கா தேசியத் தலைவர் பதவியில் நீடிக்கலாம். அதில் தவறில்லை என்று ம.இ.கா வியூக இயக்குநர் சா.வேள்பாரி கூறினார்.

மேலும் பெரும்பான்மை கிளைத்தலைவர்களின் விருப்பம் அது தான் என்றால் கட்சியின் நலனுக்காக பதவியில் நீடிப்பதற்கு அவருக்கு உரிமை உண்டு என்று அவர் குறிப்பிட்டார்.

கிளைத் தலைவர்கள் தான் கட்சி தேசியத் தலைவர் என்ற அதிகாரத்தை அவருக்கு வழங்கியிருக்கின்றனர். நிலைமை அப்படி இருக்க பழனிவேல் அதைப் பின்பற்ற வேண்டியதுதான் நியாயம் என்றும் வேள்பாரி கூறினார்.

#TamilSchoolmychoice

உதாரணமாக 2002 ஆம் ஆண்டு அம்னோ பொதுப்பேரவையில் அன்றைய அம்னோ தேசியத் தலைவரும், பிரதமருமான துன் டாக்டர் மகாதீர் முகம்மது தம்முடைய பதவி விலகளை திடீரென அறிவித்தார்.

ஆனால் கட்சித் தலைவர்கள், உறுப்பினர்களின் வலுவான குரலுக்கு செவி சாய்த்து மேலும் 18 மாதங்கள் பதவியில் நீடித்து 2003 அக்டோபரில் துன் அப்துல்லா அகமட் படாவியிடம் பதவியை மகாதீர் ஒப்படைத்தார் என்பதை சுட்டிக்காட்டிய வேள்பாரி, டத்தோஸ்ரீ பழனிவேலின் நிலையும் அப்படித்தான் இருக்கிறது என்றார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற தேசியத்தலைவர் பதவிக்கான வேட்பு மனுத்தாக்கலில் கிளைத்தலைவர்களின் 96 விழுக்காடு ஆதரவைப் பெற்று போட்டியின்றி தேர்வு பெற்ற இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் அமைச்சருமான டத்தோஸ்ரீ பழனிவேல், கிளைத்தலைவர்களின் இந்த அமோக ஆதரவு தொடருமாயின் 2016 ஆம் ஆண்டுக்குப் பின்பும் தாம் பதவியில் நீடிக்கக் கூடும் என்று கோடி காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.