இஸ்லாமாபாத், செப். 3- பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மீது இன்று மேலும் ஒரு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பாகிஸ்தானின் சர்வாதிகாரம் பெற்ற அதிபராக 1999ம் ஆண்டு பதவியேற்ற முஷாரப் 2008 வரை பதவியில் நீடித்தார்.
இவரது ஆட்சியின்போது நடைபெற்ற ஏராளமான படுகொலைகளுக்கு முஷரப் தான் காரணம் என கூறப்படுகிறது.
2008ம் ஆண்டு பதவியை இழந்த பின் வெளிநாடுகளில் தஞ்சமடைந்த முஷாரப், கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தான் திரும்பினார். தற்போது அவர் வீட்டுக்காவலில் அடைந்து வைக்கப்பட்டுள்ளார்.
இவரது ஆட்சி நடைபெற்ற 2007ம் ஆண்டு இஸ்லாமாபாத்தில் உள்ள சிகப்பு மசூதியில் பதுங்கியுள்ள சிலர் தீவிரவாத தாக்குதல் திட்டங்களை தீட்டி செயல்படுத்துவதாக குற்றம் சாட்டிய பாகிஸ்தான் ராணுவம் மசூதிக்குள் நுழைந்து தலைமை மதகுரு அப்துல் ரஷித் காசி உள்பட நூற்றுக்கணக்கானவர்களை சுட்டுக்கொன்றது. எதிர்தாக்குதலில் 58 ராணுவ வீரர்களும் பலியாகினர்.
இச்சம்பவத்தையடுத்து பாகிஸ்தானில் தலிபான்கள் நடத்திய பல்வேறு தாக்குதல்களின் விளைவாக ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர்.
முஷாரப் தற்போது பாகிஸ்தான் திரும்பியதை அடுத்து, சிகப்பு மசூதி தாக்குதலில் பலியான தலைமை மதகுரு அப்துல் ரஷித் காசியின் மகன், தனது தந்தை, பாட்டி மற்றும் பலரை கொன்று குவித்த சிகப்பு மசூதி படுகொலை வழக்கில் முஷரப்பை முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்று இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி முஷாரப் மீது வழக்கு பதிவு செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார்.
ஆனால், போலீசார் வழக்கு பதிவு செய்வதில் தாமதம் காட்டி வந்தனர். இதனால், ஆத்திரமடைந்த நீதிபதி இன்று போலீசாருக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
நீதிமன்ற வளாகத்தினுள் இப்போதே முஷாரப் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.
இதையடுத்து, நீதிபதியின் முன்னிலையில் முஷாரப் மீது போலீசார் இன்று மேலும் ஓர் கொலை வழக்கை பதிவு செய்தனர்.
பெனாசிர் பூட்டோ படுகொலை வழக்கு, பலூசிஸ்தான் புரட்சிப்படை தலைவர் நவாப் அக்பர் பக்டி உள்ளிட்ட ஏராளமான கொலை வழக்குகள் முஷாரப் மீது ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.