பாகிஸ்தான், ஏப்ரல் 3- பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப், கடந்த 2007-ஆம் ஆண்டு பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகளைச் சிறையில் அடைத்தது,
அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியது தொடர்பாக இவர் மீது தேச துரோக வழக்கை அந்நாட்டு அரசு பதிவு செய்தது. இந்த குற்றச்சாட்டை சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை ஏற்றுக் கொண்டுள்ளது.
ஒருவேளை குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மரண தண்டனை வழங்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிகின்றது.1999 முதல் 2008 வரை தன்னுடைய ஆட்சிக் காலத்தில் தன் நாட்டிலிருந்தே பலத்த எதிர்ப்புகளைச் சந்தித்தவர் பர்வேஸ் முஷாரப்.
அதிபர் பதவியில் இருந்து இறங்கியதும், பாகிஸ்தானிலிருந்து வெளியேறி லண்டன் மற்றும் துபாயில் தங்கி இருந்தார். கடந்த ஆண்டு மீண்டும் பாகிஸ்தான் திரும்பிய அவர் அங்கு தேர்தலில் நிற்கத் திட்டமிட்டார்.
ஆனால் அதற்குள் அவர் மீது தேசத் துரோக வழக்குகள் பாய்ந்தன.இந்நிலையில், இதய நோயினால் பாதிக்கப்பட்ட அவர், பாகிஸ்தானின் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார்.
தன்னுடைய நோயைக் காரணம் காட்டி நீதிமன்றத்திற்கு வருவதைத் தவிர்த்து வந்தார். மார்ச் 31-ஆம் தேதி அவர் நீதிமன்றத்தில் கட்டாயமாக நேரில் தோன்ற வேண்டும்.
இல்லையெனில் ஜாமீனில் வெளிவர முடியாத கைதுக்கு ஆளாக நேரிடும் என்று அந்நாட்டு நீதிமன்றம் எச்சரித்தது. இதையடுத்து திங்கள்கிழமை நடந்த விசாரணையின்போது முஷாரப் தோன்றினார்.
இதற்கிடையே துபாயில் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள தன் தாயைக் காண்பதற்கு முஷாரப் அனுமதி கேட்டிருந்தார். முஷாரபின் கோரிக்கையைப் பரிசீலித்த நீதிமன்றம், அதைப் பற்றிய முடிவுகளை அரசுதான் எடுக்க வேண்டும் எனத் தெரிவித்து விட்டது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பர்வேஸ் முஷாரப், “நான் என் நாட்டின் நலனுக்காகத்தான் செய்தேன். ஆனால் என்னைக் கொடுங் கோலன் என்று சொல்வதைக் கேட்டு நான் வருந்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார் .