இஸ்லாமாபாத், பிப் 20 -பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் முஷாரப் மீது தேச துரோக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பல முறை நேரில் வராமல் நழுவி வந்தார்.
ஏற்கனவே வழக்கு விசாரணைக்கு முஷாரப் நீதிமன்றத்திற்கு வரும் வழியில் சக்தி வாய்ந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
எனவே இம்முறை அவர் செல்லும் வழியிலும், நீதிமன்றத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஜனவரி 2ம் தேதி நீதிமன்றத்திற்கு வரும் போது நெஞ்சுவலி ஏற்பட்டது. இதன் காரணமாக அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வரும் ராவல்பிண்டி ராணுவ மருத்துவமனையில் இருந்து சிறப்பு நீதிமன்றத்திற்கு வந்தார்.
குண்டு துளைக்காத காரில் முன்னும் பின்னுமாக 17 பாதுகாப்பு வாகனங்கள் தொடர அவர் நீதிமன்றத்திற்கு வந்தார். அவர் செல்லும் வழியெங்கும் 1200க்கும் அதிகமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
மேலும் செல்லும் பாதையிலும், நீதிமன்ற வளாகத்திலும் வெடிகுண்டுகள் புதைத்து வைக்கப்பட்டுள்ளனவா என நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட கருவிகள் மூலம் சோதனை செய்தனர்.
முஷாரப்பிடம் விசாரணை நடத்துவதற்காக தேசிய நூலகத்தில் தனியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் நீதிமன்றத்திலும் சுமார் 400 காவலர்கள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.
நீதிபதி பைசல் அராப் தலைமையிலான 3 பேர் கொண்டக் குழு முஷாரப் வழக்கை விசாரணை நடத்தி வருகிறது.நீதிமன்றத்தில் சுமார் 15 நிமிடங்கள் முஷாரப் இருந்தார்.
அப்போது அவரது வக்கீல் அகமது ரசா கசௌரி நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், முஷாரப்பின் உடல் நிலை காரணமாகத்தான் வர இயலவில்லை.
நீதிமன்றத்திற்கு வருவதற்க்கு தயக்கமோ, அச்சமோ கிடையாது என்று தெரிவித்தார். இந்நிலையில் நேரில் வராவிட்டால் ஜாமீன் இல்லாத கைது ஆணை பிறப்பிக்கப்படும் என்று நீதிமன்றம் எச்சரித்திருந்தது.
இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் அல்லது மரண தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.