சென்னை, செப். 5- ஆசிரியர் தினத்தை ஒட்டி முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, புதன்கிழமை அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:-
தாமின் புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந்தார்-என்ற குறளின் மூலம் கல்வியறிவு பெற்ற ஒவ்வொருவரும் தனது மகிழ்ச்சிக்கு காரணமான கல்வி, உலகில் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிப்பதைக் கண்டு மென்மேலும் அந்தக் கல்வி அறிவினை மேம்படுத்திக் கொள்ளவே விரும்புவர் என்று கருத்தினை வழங்கினார் வள்ளுவர்.
அவர் வழங்கிய கருத்துக்கேற்ப டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் தான் கற்ற கல்வியை அனைவரும் பெற்று வாழ்வில் உயர்ந்து மகிழ்ந்திட வேண்டும் என்ற உயரிய நோக்கில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் சிறந்த முன் உதாரணமாக விளங்கும் வகையில் நல்லாசிரியராகப் பணியாற்றி சிறந்த சமுதாயத்தினை உருவாக்கிடப் பாடுபட்டார்.
மாணவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு ரூ.1,660 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
இத்தகைய சிறப்புமிக்க உயரிய பணியை ஆற்றிடும் ஆசிரியர்கள் சமுதாய உணர்வோடு பணியாற்றி எதிர்காலத்தில் இந்த நாட்டின் புகழை உலக அரங்கில் உயர்த்தி நிறுத்திடும் ஒரு அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கிட வேண்டுமென்ற என்னுடைய விருப்பத்தை தெரிவித்து, ஆசிரியர் தினத்தை கொண்டாடும் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என வாழ்த்துச் செய்தியில் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.