செப். 9- விநாயகப் பெருமான் ஆவணி மாதம் சதுர்த்தி திதியன்று அவதரித்தார்.
இவர் யானை முகத்தை தனக்கு வைத்திருக்கிறார். அநேகமாக, எல்லா தெய்வங்களுக்கும் மனித முகம் இருக்க, இவருக்கு மட்டும் ஏன் யானையின் முகம் வந்தது? எல்லாம், சிவபெருமான் நம் மீது கொண்ட கருணையால் தான்.
கஜமுகாசுரன் என்ற அசுரன், பிரம்மாவிடம் ஒரு வரம் பெற்றான். ஆண், பெண் சம்பந்தமில்லாமல் பிறந்த ஒருவனாலேயே தனக்கு அழிவு வரவேண்டும் என்பது அவன் கேட்ட வரம்; கேட்ட வரம் கிடைத்தது.
ஆண், பெண் சம்பந்தமின்றி, உலகில், குழந்தை பிறப்பு சாத்தியம் இல்லை என்பது அவன் போட்ட கணக்கு. அவன் நினைத்தபடியே அப்படி யாருமே உலகில் பிறக்கவில்லை. எனவே, அவன் சர்வலோகங்களையும் வளைத்து, தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தான்.
தேவர்களை வதைத்தான். அவர்கள், துன்பம் தாளாமல் தவித்தனர். அவர்களது துன்பம் தீர்க்க லோகமாதாவான பார்வதிதேவி முடிவு செய்தாள். தன் மேனியில் பூசியிருந்த மஞ்சளை வழித்தெடுத்து உருண்டையாக்கினாள். உறுப்புகளையும், உயிரையும் கொடுத்தாள். அந்தக் குழந்தைக்கு, பிள்ளையார் என பெயர் சூட்டினாள்.
அந்தப்பிள்ளை தன் அன்னையின் அந்தப்புர காவலனாக இருந்தான். சிவபெருமான் அங்கு வந்தார். அவர் மனதில் தேவர்கள் படும் துன்பத்தை நினைத்து கருணை உண்டாயிற்று. இதற்காக ஒரு திருவிளையாடல் செய்தார். என் அந்தப்புரத்தில் இருக்கும் நீ யாரடா? எனக் கேட்டு, பிள்ளையாரின் கழுத்தை வெட்டிவிட்டார்.
அதே நேரத்தில், வடக்கு நோக்கி ஒரு யானை படுத்திருந்தது. வடக்கு நோக்கி யார் படுத்தாலும், உலக நலனுக்கு ஆகாது என்பது சாஸ்திரம். அந்த நேரத்தில் பார்வதி வந்தாள். தன் மணாளனைக் கண்டித்தாள். பிள்ளைக்கு மீண்டும் உயிர் வேண்டும் என்றாள்.
சிவபெருமானும், வடக்கு நோக்கி படுத்து, உலக நலனுக்கு எதிர்விளைவைத் தந்து கொண்டிருந்த யானையின் தலையை வெட்டி, பிள்ளையாருக்கு பொருத்தி, மீண்டும் உயிர் கொடுத்தார். தாய், தந்தை கலப்பின்றி பிறந்த அந்தக் குழந்தை, கஜமுகாசுரனை வென்று தேவர்களைப் பாதுகாத்தான்.
யானைத் தலையை விநாயகருக்கு தேர்ந்தெடுத்ததன் மூலம், பல அறிவுரைகள் மனிதனுக்குத்தரப்படுகின்றன. மனிதனின் வாயும், உதடும் தெளிவாக வெளியே தெரிகிறது. மற்ற மிருகங்களுக்கும் கூட அப்படித்தான். ஆனால், யானையின் வாயை தும்பிக்கை மூடிக் கொண்டிருக்கிறது; அது வெளியே தெரியாது. தேவையின்றி பேசக்கூடாது என்பதும், தேவையற்ற பேச்சு பல பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதும் இதனால் விளக்கப்படுகிறது.
விநாயகருக்கு, சுமுகர் என்ற பெயருண்டு. ச என்றால் மேலான அல்லது ஆனந்தமான என்று பொருள்படும். அவர் ஆனந்தமான முகத்தை உடையவர். யானையைப் பார்த்தால் குழந்தைகள் ஆனந்தமாக இருப்பது போல, பக்தர்களுக்கும் ஆனந்தத்தை தரவேண்டும் என்பதற்காக இந்த முகத்தை சிவபெருமான் அவருக்கு அளித்தார்.
விநாயகர் சதுர்த்தி நன்னாளில், ஓம் கணேசாய நம என்ற மந்திரத்தை, 108 முறை சொல்லி, அருகம்புல் அணிவித்து வழிபட்டால், அவரது நல்லருளைப் பெறலாம்.