Home One Line P2 ஜோ பைடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு வாழ்த்து

ஜோ பைடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு வாழ்த்து

801
0
SHARE
Ad

வாஷிங்டன் :அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் ஜோ பைடன் நேற்று சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி கொண்டாட்ட வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்

பொதுவாக அமெரிக்காவில் தீபாவளி திருநாள்தான் பரவலாக பெரிய அளவில் கொண்டாடப்படுவது உண்டு. வெள்ளை மாளிகையிலும் இந்த பெருநாள் கொண்டாடப்படும். அமெரிக்க அதிபர்களாக இருந்தவர்களும்  ஆண்டுதோறும் தீபாவளி நல்வாழ்த்துக்களை அமெரிக்க இந்திய வம்சாவளியினருக்கு தெரிவிப்பது வழக்கம்.

எதிர்வரும் நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பரபரப்பான பரப்புரைகள் நடந்து கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு ஜோ பைடன் வாழ்த்துகள் தெரிவித்து இருக்கிறார்.

#TamilSchoolmychoice

துணை அதிபர் வேட்பாளராக போட்டியிடும் கமலா ஹாரிஸ், இந்திய-இந்து பின்னணியைப் பாரம்பரியமாகக் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே!

அவர் துணை அதிபராகப் போட்டியிடுவதால் அமெரிக்க இந்திய வாக்காளர்களின் வாக்குகள் பெருமளவில் ஜோ பைடனுக்கே சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று பதிவிட்ட ஜோ பைடன் “கணேஷ் சதுர்த்தி எனும் இந்துப் பெருநாளை இந்தியாவிலும் அமெரிக்காவிலும் உலகமெங்கிலும் கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பொருள்படும்படி ஆங்கிலத்தில் பதிவிட்டார்.

“நீங்கள் எதிர்நோக்கும் தடைகளைத் தாண்டி செயல்படவும் உங்களுக்கு   அறிவுத்திறன் அருளப்படவும், புதிய தொடக்கங்கள் புதிய பாதைகளை நீங்கள் அடையாளம் காணவும் உங்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கிறேன்” எனவும் ஜோ பைடன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆங்கிலத்தில் பதிவிட்டார்.

இதைத் தொடர்ந்து அவரது விநாயகர் சதுர்த்தி டுவிட்டர் செய்தி சமூக ஊடகங்களில் பரவலாக இந்தியர்களிடையே பகிரப்பட்டு வருகிறது.